மனமே விழித்தெழு (19)
சில கேள்விகளோடு இந்தப் பகுதியை ஆரம்பிக்கிறேன். நாம் ஒருவர் தான். ஆனால் நம்முடைய செயல்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே அது ஏன்? சில நேரங்களில் மற்றவர்களுக்கு உதவுகிறோம், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் சில நேரத்தில் நாம் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறோம். இது ஏன்? சில நேரத்தில் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்கிறோம். ஆனால் சில நாள் படுக்கையை விட்டே எழுந்திருக்க மனமிருக்காது. துாங்கிக் கொண்டே இருக்கத் தோன்றும். இது ஏன்? சிலர் எப்போதும் 'சர்வ ஜன சுகினோ பவந்து' என இருக்கிறார்கள். இன்னும் சிலர் எப்படியாவது மற்றவரை வீழ்த்தி தான் வெற்றி பெற வேண்டும் என வெறியுடன் இருக்கிறார்கள். ஏன் இந்த வேறுபாடு? சரி... விடை பெற இதிகாச கதைகளைப் பார்க்கலாம். கவுரவர்கள் சபையில் கர்ணனைத் தன் அம்பால் கொல்வேன் என சூளுரைத்த அர்ஜூனன் போர்க்களத்தில், 'நான் யாரையும் கொல்ல மாட்டேன்: எனக்கு இந்த நாடோ போரோ தேவையில்லை, எல்லாவற்றையும் விட்டுவிட்டு காட்டிற்குப் போய் ஒரு யோகியாக வாழப் போகிறேன்' என்றானே... ஏன் இந்த மாற்றம்? கும்பகர்ணனை பாருங்கள். அவன் எப்போதும் துாங்கிக் கொண்டா இருந்தான்? விழித்துக் கொண்ட பிறகு ராமபிரானோடு கடுமையாக யுத்தம் செய்தானே.... அது எப்படி?இதற்கெல்லாம் காரணம் நம் குணம் தான்! இந்த 'குணம்' என்ற வார்த்தையை நாம் நேரத்தில் கேள்விப்படுகிறோம். 'அவனுக்குக் குணம் கெட்டு விட்டது', 'அவருக்கு பொல்லாத கெட்ட குணம்', 'இவருக்கு நல்ல குணம்' என்றெல்லாம் நாம் பேசுகிறோம். குணம் என்றால் என்ன? குணத்திற்கும், எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் தொடர்பு உண்டா என்பது பற்றி இப்போது பார்க்கப் போகிறோம். மகாவிஷ்ணுவின் அவதாரம் பத்து என்கிறோம். கிரகங்கள் ஒன்பது. திசைகள் எட்டு. வானவில்லில் நிறங்கள் ஏழு. சுவைகள் ஆறு. இயற்கையின் சக்திகள் ஐந்து. வேதங்கள் நான்கு என்கிறோம்.அதைப் போலவே நமக்கு மூன்று அடிப்படையான குணங்கள் உள்ளன. அவை சாத்விகம், ராஜஸம் மற்றும் தாமசம் என்பன. இதைத் தான் 'திரிகுணா' என்பர். இக்குணங்கள் நம் எல்லோரிடமும் இருக்கின்றன. நமது எண்ணம், சொல், செயல்களை நிர்ணயிக்கின்றன. எந்த குணம் எப்போது மேலோங்குகிறதோ அதற்கேற்ப செயல்கள் அமையும். எனவே செயலை மாற்ற வேண்டுமானால் முதலில் குணத்தை மாற்ற வேண்டும். உதாரணமாக மைசூர்பாகு இனிப்பான தின்பண்டம். அதில் சர்க்கரை சேர்த்தால் தான் இனிக்கும். மாறாக மிளகாயை சேர்த்து விட்டு இனிக்கவில்லையே என்றால் எப்படி? என்னிடம் சர்க்கரை இல்லை. ஆனால் மைசூர்பாகு வேண்டும் என்றால் என்ன செய்வது? அதே போலவே நல்ல எண்ணங்கள் வேண்டுமென்றால் நமக்குள் சாத்விக குணம் வேண்டும். கடுமையாக உழைத்து முன்னேற நமக்குள் ரஜோ குணம் தேவை. ஒரு வேலையையும் செய்யாது ஓய்வெடுக்க விரும்பினால் தமோ குணம் தேவை. சரி... இப்போது இந்த குணங்கள் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். சாத்வீகம் என்பது மன அமைதி, நல்ல எண்ணங்கள், ஆக்கபூர்வமாக சிந்தனை, ஆக்கபூர்வமான சுபாவம் போன்றவற்றை கொண்டது. ராஜஸம் என்பது பேரார்வம். ஆங்கிலத்தில் 'பேஷன்' (Passion) என்பர். சுறுசுறுப்பாக இருத்தல், நான் எனது என்ற எண்ணம், எனது வாழ்வின் குறிக்கோள், சுயநலம் சார்ந்த உணர்வு, ஆங்கிலத்தில் இதை 'ஈகோயிஸ்டிக்' (egoistic) என்பர். எப்போதும் சிந்தித்தல், எந்த விளைவையாவது துரத்திக் கொண்டே இருத்தல் போன்ற உணர்வுகளால் உந்தப்படும் நிலை.தாமசம் என்பது நிம்மதியின்றி அலை பாயும் சுபாவம், நிலையற்ற மனம் (Imbalance in mind), குழப்பம், பதட்டம், மாசுபட்ட மனம், அழிக்கும் மனநிலை, மனதின் மாயத் தோற்றம் (Illusion), எதிர்மறை எண்ணங்கள் (Negative thoughts), மந்தம், சோம்பல், அக்கறையின்மை (Apathy), வன்மம், தீய எண்ணம் போன்ற உணர்வுகளின் வெளிப்பாடு.மேலே சொன்ன தன்மைகளை ஒன்றன் பின் ஒன்றாக பட்டியல் இடுங்கள். இவை உங்களிடம் இருக்கிறதா என சிந்தியுங்கள். இவை ஒன்றுமே இல்லை என நீங்கள் சொன்னால் 'நீங்கள் ஒரு பரப்பிரம்மம் அதாவது மும்மூர்த்திக்கும் மேலான சக்தி! ஏனெனில் கடவுளுக்குத் தான் இந்த குணங்களும் இல்லை. அதாவது நிர்குணமான சக்தி. இந்த குணங்களால் சமுதாயத்தில் நிகழும் விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவருக்கு இந்த குணம் என்றால் குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் எப்படி நடப்பார் என நம்மால் ஓரளவு யூகிக்க முடியும். எனவே அவரது செயலோ அல்லது வார்த்தைகளோ நம்மை பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க முடியும். சில அன்றாட உதாரணங்களை பார்ப்போம். வீட்டில் ஒருநாள் ஏதோ நெளிந்து செல்வதைப் பார்க்கிறோம். சற்று உற்று நோக்கினால் பாம்பா அல்லது புழுவா என்பது தெரியும். சரி நமக்கு முன் செல்வது புழு என தெரிந்தால் அலட்டிக் கொள்ள மாட்டோம். ஆனால் பாம்பை போல் புழுவைக் கண்டு அலறினால்? நம் முன்னால் இருப்பது பாம்பு என்றால் கண்டிப்பாகப் பயப்பட வேண்டும். புழுவைப் பார்த்து பயப்படாதது போல அந்தப் பாம்பை நாம் கையால் எடுக்க முற்பட்டால்? நம்மால் பாம்பை அடிக்கவோ பிடிக்கவோ முடியாது என்றால் நாம் அதற்கு மற்றவரது உதவியை நாடுவோம் அல்லவா? இரண்டு வயது குழந்தைக்கு பாம்பு, புழு என்ற வித்தியாசம் தெரியாது. பாம்பைத் தொடப் போகும் அக்குழந்தை. நாம் பதபதைத்து குழந்தையை தடுப்போம். அது மட்டுமல்ல. பாம்பைப் பார்த்தால் தொடக் கூடாது என சொல்லிக் கொடுப்போம் அல்லவா? அது மட்டுமல்ல. கூர்மையான பொருட்கள், சூடான பொருட்களைக் குழந்தைகள் இருக்கும் இடத்தில் இருந்தால் அவற்றால் என்ன பாதிப்பு என்பதை புரிந்து கொண்டு அப்புறப்படுத்துவோம். நாமும் ஒரு காலத்தில் குழந்தை போலவே வாழ்ந்தோம். ஆனால் அனுபவம் காரணமாக எது என்ன செய்யும் என அறிந்தோம் அல்லவா? இது தான் வாழ்க்கைக் கல்வி. நமக்கு சில நேரத்தில் சில பொருட்கள் தேவைப்படும். நாம் வரைவது பச்சைக்கிளி என்றால் பச்சை வண்ணம் தேவை தானே? வானத்தை வரையும் போது பச்சையைப் பயன்படுத்தினால்? அதே போன்று தான் நாம் முன்னேற தேவையான குணங்கள் பற்றியும், அதை எப்படி வளர்க்க வேண்டும், முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள குணத்தை அகற்றுவது எப்படி என்றும் நாம் அறிய வேண்டும். விழித்தெழுந்த மனம் மட்டுமே இதைச் செய்யும்!ஆனால் இது போன்ற வாழ்க்கைக் கல்வியை நாம் சொல்லிக் கொடுக்கிறோமா? கண்டிப்பாக இல்லை. ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் பகவத் கீதை போன்ற நல்ல நுால்களால் வாழ்க்கையை கற்றதோடு, குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தனர். ஆனால் நாமோ ஒன்றுக்கும் பயன்படாத தொலைக்காட்சியைப் பார்த்தபடி வாழ்வைத் தொலைக்கிறோம்.சரி...இந்த குணங்கள் என்ன, அவை ஏன் இருக்கின்றன? அவை பிறவியிலேயே பிறந்ததா? நமக்கு தீமை தரும் குணங்களை மாற்ற முடியுமா? என வரும் பகுதியில் பார்க்கலாம்.தொடரும்அலைபேசி: 73396 77870திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன்