உள்ளூர் செய்திகள்

பிரிந்த தோழியரை இணைக்கும் தலம்

கருத்து வேறுபாட்டால் பிரிந்த தோழிகள் மீண்டும் இணைய மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள மீனாட்சியை வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்களும் இந்த அம்பாளை வணங்கலாம்.தல வரலாறு: மதுரையை ஆண்ட மலையத் துவஜ பாண்டிய மன்னனின் மகளாக அவதரித்த மீனாட்சி, தனது குழந்தைப் பருவத்தில் இத்தலத்தில் தோழியருடன் விளையாடி மகிழ்ந்தாள். பிற்காலத்தில் மதுரையின் ஆட்சிப் பொறுப்பேற்ற அவள், சுந்தரேஸ்வரரை மணம் முடித்தாள். அப்போது, அவளது தோழிகள் சுந்தரேஸ்வரரிடம், தங்கள் தோழி மீனாட்சியுடன் விளையாடி மகிழ்ந்த இடத்திற்கு வந்து தங்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர். சுந்தரேஸ்வரரும் மீனாட்சியுடன் இங்கு வந்து தங்கினார். இப்போதும் கூட, புதுமணத் தம்பதிகளை தங்கள் வீட்டுக்கு வரவழைக்கும் உறவினர்களும், நண்பர்களும் அவர்களுக்கு பால் பழம் கொடுத்து வரவேற்பு தரும் வழக்கம் இருக்கிறது. அதன்படி மணக்கோலத்தில் வந்த அந்த தம்பதிக்கு, பிற்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. சுவாமியை, கல்யாண சுந்தரர் என்று அழைப்பர். அம்பிகையின் குழந்தைப் பருவ விளையாட்டு தலம் என்பதால் 'பால மீனாம்பிகை' என்று பெயர் பெற்றாள்.திருமண பிரார்த்தனை: அம்பாள் பால மீனாம்பிகை, தெற்கு நோக்கி தனிச்சன்னிதியில் இருக்கிறாள். சிவன், அம்பாளுடன் மணக்கோலத்தில் கல்யாண சுந்தரேஸ்வரராக காட்சி தந்ததால், இத்தலம் திருமணத்தடை நீக்கும் தலமாக திகழ்கிறது. நீண்ட நாட்களாக திருமணத்தடை உள்ளவர்கள் சிவன், அம்பிகைக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். புதுமணத் தம்பதிகள் திருமணமான சில நாட்களில் வந்து வணங்கினால் தாம்பத்யம் சிறந்து நல்ல புத்திரர்களைப் பெறுவார்கள். சிவன் சன்னிதி முன்பு 'வாசியோக நந்தி' உள்ளது. முன்பு இந்த நந்தியைச் சுற்றிலும் தண்ணீர் நிரப்பும் வரையில் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இப்பகுதியில் பஞ்சம் ஏற்படும் போது மக்கள் இதில் நீரை நிரப்பி விடுவர். இதனால் மழை பொழிந்து பஞ்சம் நீங்கும் என்பது நம்பிக்கை. சிறப்பம்சம்: இக்கோவில் பாண்டிய மன்னர் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டதன் அடையாளமாக தூண்களில் மீன் சின்னம் உள்ளது. கூன் பாண்டியனின் வெப்பு நோய் தீர்க்க மதுரை வந்த சம்பந்தர், இங்குள்ள சுவாமியையும் தரிசித்துச் சென்றார். இங்கு ரிண விமோசன பைரவர் தனி சன்னிதியில் இருக்கிறார். கடன் தொல்லையிலிருந்து விடுபட இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இங்குள்ள சந்தான விநாயகரிடம், புத்திரப்பேறு இல்லாதவர்கள் அருகம்புல் மாலை அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர்.கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தோழிகள் இங்குள்ள பாலமீனாம்பிகைக்கு பட்டு அணிவித்து வழிபட்டால் மீண்டும் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பிரகாரத்தில் பாலசுப்பிரமணியர் சன்னிதியும், கோவிலுக்கு வெளியே பத்திரகாளியம்மன் சன்னிதியும் உள்ளன.இருப்பிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து ஆறு கி.மீ.,நேரம்: காலை 6:00 - 10:00, மாலை 4:00 - 8:00 மணி.அலைபேசி : 98437 77721