கோவை யோக விநாயகர்
முழுமுதற்கடவுளான விநாயகர் கோவை குனியமுத்தூரில் யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.தல வரலாறு :யோக வளமும், தியானசக்தியும், ஆன்மிக அறிவும் தந்து நாடு நலம் பெற, பிரமாண்டமான யோக நிஷ்டை விநாயகரை பிரதிஷ்டை செய்ய இப்பகுதி பக்தர்கள் நினைத்தனர். அதன் அடிப்படையில் யோக விநாயகரை தேர்வு செய்து, அதற்கான விபரங்களை சேகரிக்கும் பொருட்டு ஆன்மிக அறிஞர்களையும், ஆதீனங்களையும் சந்தித்தனர். அவர்களின் அறிவுரைப்படியும், சிற்ப வல்லுனர்களின் யோசனைப்படியும் இச்சிலையை உருவாக்கினர். அமைதியான சூழலில் கோயில் அமைந்துள்ளது.தல சிறப்பு:தமிழகத்தில் விநாயகர் சில கோயில்களில் மட்டுமே மூலவராக தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறார். இக்கோயில்களில் எல்லாம் விநாயகரை அமர்ந்த கோலம், நின்ற கோலம், நடன கோலத்தில் காணலாம். ஆனால் இந்தக் கோயிலில் சபரிமலை ஐயப்பனை போல், யோக பட்டம் தரித்து, இளஞ்சூரிய சிவப்பு நிறத்தோடு யோக நிஷ்டையில் விநாயகர் அமர்ந்துள்ளார். வலது முன்கையில் அட்சமாலையும், பின்கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசக்கயிறும் ஏந்தி கிழக்கு நோக்கி உள்ளார். அஷ்டாங்க யோக லட்சணங்களோடு தன்னை நாடி வருவோருக்கு அஷ்ட யோகங்களையும் அருள்கிறார். கோயில் அமைப்பு:கோயிலின் நுழைவுவாயிலில் வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சந்நிதி உள்ளது. சந்நிதியின் மேற்குப் பக்கம் புற்றும், ராகு சிலையும் உள்ளது. கோயில் உட்பிரகாரத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை இறைவன் செய்கிறான் என்பதற்கேற்ப, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவன் அருள்பாலிக்கின்றனர்.பிரார்த்தனை :குழந்தைப்பேறு, தடைபட்ட திருமணம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், யோகா, தியானத்தில் சிறந்து விளங்கவும் இங்குள்ள யோகவிநாயகரை வழிபடுகின்றனர். திருவிழா:விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி, அமாவாசை, பவுர்ணமி. சங்கடஹரசதுர்த்தி நாட்களில் சிறப்பு அர்ச்சனையும், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால சிறப்பு பூஜையும் நடக்கிறது. திறக்கும் நேரம்:காலை 6 -10, மாலை 5.30 - இரவு 8.30. வெள்ளியன்று மதியம்12 மணி.இருப்பிடம்:உக்கடத்தில் இருந்து (4.5 கி.மீ) பாலக்காடு சாலை வழியாக சுந்தராபுரம் செல்லும் வழி. நிர்மலா மாதா பள்ளி அருகில்.போன்:0422 2675 220.