வெள்ளித்தடியில் தர்ம சாஸ்தா
ஐயப்பனை மனிதவடிவில் மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் வெள்ளித்தடி வடிவில் எங்கும் பார்க்க வாய்ப்பில்லை. அதைக் காண விரும்பினால் கேரளா எர்ணாகுளம் மஞ்ஜப்புரா அம்பாடத்து மாளிகை கோயிலுக்கு வாருங்கள். ஐயப்பன் அவதரித்த பங்குனி உத்திரத்தன்று இங்கு தரிசிப்பது சிறப்பு. ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தள ராஜா. இவருக்கு உதயணன் என்னும் திருடனால் தொந்தரவு இருந்தது. இதையறிந்த ஐயப்பன் திருடனுடன் போருக்குச் சென்றார். அம்பலப்புழா, ஆலங்காட்டு ராஜாக்கள் உதவியாக சென்றனர். அன்று முதல் இந்தக் குடும்பங்கள் ஐயப்பனின் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஐயப்பன் தான் பூமிக்கு வந்த கடமைகள் நிறைவேறியதும் சபரிமலையில் கோயில் கொள்ள முடிவெடுத்தார். இதற்காக எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைக்கும்படி குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அம்பலப்புழா குடும்பத்தினரும், ஐயப்பனின் நண்பரான வாபரும் பாதையை சீரமைக்க துணை நின்றனர். இதுவே ''பெரிய பாதை'' எனப்படுகிறது. இதன்பிறகு ஐயப்பனும், அம்பாடத்து மாளிகை குடும்பத்தினரும் சபரிமலை சென்றனர். அங்கு பரசுராமர் ஸ்தாபித்த சிலையில் ஐயப்பன் ஜோதி சொரூபமாக ஐக்கியமாகினார். அம்பாடத்து மாளிகை குடும்பத்தை சேர்ந்த கேசவன் பிள்ளை ஆண்டுதோறும் சபரிமலை சென்று வந்தார். வயதான பிறகு சபரிமலைக்குச் செல்லும் வழியில் அந்தணர் ஒருவரைச் சந்தித்தார். அவர் கேசவனிடம் வெள்ளிமுத்திரையுடன் கூடிய தடி, விபூதிப்பை, கல் ஆகியவற்றை கொடுத்து, ''இதோ வருகிறேன்'' எனச் சொல்லிச் சென்றார். ஆனால் வரவில்லை. ஐயப்பனை தரிசித்து விட்டு கேசவன் ஊர் திரும்பும் வழியில் மீண்டும் அந்தணரைச் சந்தித்தார். ''நான் கொடுத்த மூன்று பொருள்களையும் நீங்கள் பூஜித்து வந்தால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்'' என்று சொல்லி மறைந்தார். அம்பாடத்து மாளிகை குடும்பத்தினர் அந்தணராக வந்தவர் ஐயப்பனே என்பதை உணர்ந்து கோயில் கட்டினர். கருவறையில் இந்த பொருட்கள் 'தர்ம சாஸ்தாவாக' கருதப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. நோய், குடும்ப பிரச்னை, மனக்கஷ்டம் தீர பக்தர்கள் வழிபட்டு பலன் பெறுகின்றனர். எப்படி செல்வது* எர்ணாகுளத்திலிருந்து 40 கி.மீ., துாரத்தில் காலடி. அங்கிருந்து 3 கி.மீ., விசேஷ நாள்மகரஜோதி தரிசனம், பங்குனி உத்திரம்நேரம்சபரிமலையில் நடை திறக்கும் நாட்களில் மட்டும் திறந்திருக்கும் அதிகாலை 5:00 - 1:00 மணி மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 0484 - 228 4167அருகிலுள்ள தலம்காலடி கிருஷ்ணர் கோயில் (3 கி.மீ.,)நேரம்அதிகாலை 5:00 - 1:00 மணி மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு : 93888 62321