எல்லார் கருத்தும் சரியானதே!
தைப்பூசத்தன்று, வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூரில் ஸித்தியடைந்தார். இதையொட்டி அவரைக் குறித்த ஒரு சிறப்புக்கட்டுரை.'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்' என்ற கருத்தாழமும், தேனிசையும் கொண்ட பாடலைப் பாடினாரே வள்ளலார்! அவர் முன்னிலையில், சிலர் ஒரு வாதத்தை வைத்தனர். அதை இன்னொரு தரப்பினர் எதிர்த்தனர்.''சுவாமி! எங்கள் இரு பிரிவினரில் யார் கருத்து சரியானது என்று நீங்களே தீர்ப்பு வழங்க வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டனர். யார் மனதும் புண்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடையவர் வள்ளலார். எந்தத்தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலும் பிரச்னை வரும். எனவே, அவர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களிடையே பேசினார். ''அன்பர்களே! ஒரு கதை சொல்கிறேன், கேளுங்கள். தீர்ப்பு அந்தக் கதையிலேயே அடங்கியிருப்பதை உணர்வீர்கள்,'' என்றார்.எல்லாரும் ஆவலுடன் அமர்ந்திருந்தனர். கதை துவங்கியது.''ஒரு சாமியார் நிர்வாணமாக சாலையில் திரிந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த ஒரு பக்தன், ''சுவாமி! திகம்பரராக (நிர்வாண நிலை) தாங்கள் இங்கு எழுந்தருளியுள்ளீர்கள். இதோ! என் அன்புக்காணிக்கையாக இந்தப் பழங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்றான். சாமியார் அன்போடு அதை ஏற்றார்.அப்போது, ஒரு முரடன் வந்தான்.பழம் கொடுத்தவனை நோக்கி,''அறிவு கெட்டவனே! பெண்கள் நடமாடும் பகுதியில் இந்தக் கிறுக்கன் நிர்வாணமாகத் திரிகிறான். இவனை சந்நியாசி என நினைத்து பழம் கொடுக்கிறாயே! உன்னையும், இந்த சாமியாரையும் என்ன செய்கிறேன் பார்...'' என கல்லை எடுத்து அவர்கள் மேல் வீசி எறிந்தான்.இந்த சம்பவங்களை இன்னொருவன் கவனித்துக் கொண்டிருந்தான். வேகமாக ஓடி வந்து ''அடேய்! சண்டை போடாதீர்கள். வாருங்கள் நீதிமன்றத்துக்கு! நீதிபதி இந்த பிரச்னையை தீர்த்து வைக்கட்டும்,'' என்றான்.வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது. அவர்களை அழைத்துச் சென்றவன் நீதிபதியிடம் நடந்ததை விளக்கினான். சாமியாரிடம் நீதிபதி,''உமக்கு பழம் தந்தவர் யார்?'' என்றார். சாமியார் தன் மீது கல்லெறிந்தவனைச் சுட்டிக்காட்டினார். நீதிபதிக்கு குழப்பமாகி விட்டது. ''அப்படியானால் கல்லெறிந்தவர்...'' என நீதிபதி கேட்க, பழம் தந்தவனைச் சுட்டிக்காட்டினார். சந்தேகத்தில் மீண்டும் அவர் இதே கேள்வியைக் கேட்கவே, தங்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தவனைச் சுட்டிக்காட்டி, ''இவன் தான் அடித்தான்,'' என்றார். நீதிபதிக்கு புரிந்து விட்டது.கல்லால் அடித்தவனும், பழம் தந்தவனும், அழைத்து வந்தவனும் ஆகிய மூவரையுமே இவர் கடவுளின் வடிவமாகத்தான் பார்க்கிறார். இவர் முற்றும் துறந்த ஞானி என முடிவெடுத்து மூவரையும் அனுப்பி வைத்தார். கதையை முடித்த வள்ளலார், ''புரிந்து கொண்டீர்களா! எல்லார் கருத்தும், அவரவர் வகையில் சரியானதே. இதற்காக கருத்துபேதம் கொள்ளத் தேவையில்லை,'' என்றார்.