என்றென்றும் நட்பு தொடர...
'மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப் தான் என்கிறார்கள் இளைஞர்கள். புராண காலத்திலேயே இந்த உண்மையை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் தேவாரம் பாடிய சிவனடியாரான சுந்தரர். இவரைத் தன் நண்பராக சிவபெருமான் ஏற்றுக் கொண்ட திருத்தலம் திருவெண்ணெய்நல்லுார். இங்கு இருக்கும் கிருபாபுரீஸ்வரரை தரிசித்தால் வாழும் காலம் வரை நண்பர்களின் நட்பு நீடிக்கும். பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது ஆலாகால விஷம் தோன்றியது. அந்த விஷத்தை உண்டு உலகைக் காப்பாற்றினார் சிவன். அவருக்கு பாதிப்பு வரக் கூடாது என வெண்ணெய்க் கோட்டை கட்டி யாகத்தீ மூட்டி அதன் மீது பார்வதி தவமிருந்தாள். இதனால் இந்த ஊர் திருவெண்ணெய்நல்லுார் என அழைக்கப்பட்டது.தாருகாவனத்து முனிவர்கள் மனைவியருடன் வசித்து வந்தனர். தவத்தின் மூலம் அரிய சக்திகளைப் பெற்றதால் ஆணவத்துடன் திரிந்தனர். அதை அடக்க விரும்பிய சிவன் வனத்திற்கு வந்தார். அவரின் அழகைக் கண்ட முனிவர்களின் மனைவியர் அவரின் பின்னால் சென்றனர். சிவனை அழிக்க தீய சக்திகளை முனிவர்கள் ஏவ, அவர்களை அடக்கினார். இத்தலமே அருட்டுறை (அருள்துறை) என பெயர் பெற்றது. தற்போது திருவெண்ணெய்நல்லுார் எனப்படுகிறது. முனிவர்களை மன்னித்து கிருபை செய்ததால் 'கிருபாபுரீஸ்வரர்' எனப்படுகிறார். சுயம்பு லிங்கமாக இருக்கிறார். இக்கோயிலில் உள்ள அம்மன் (மங்களாம்பிகை) நான்கு கைகளுடன் இருக்கிறாள். பெண்ணை, வைகுண்டம், வேதம், சிவகங்கை, பாண்டவ தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் உள்ளன.சிவனடியாரான சுந்தரரின் திருமணத்தின் போது முதியவர் வேடத்தில் சிவன் வந்தார். 'நீ எனக்கு அடிமை என்று உன் முன்னோர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்'' என ஓலைச்சுவடியைக் காட்டினார். அது உண்மை என்பதை அறிந்த சுந்தரர் திகைத்தார். திருமணம் நின்று போனதால் சிவனை 'பித்தன்' என திட்டினார். சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவெண்ணெய்நல்லுார் வந்தார் சிவன். வாசலில் பாதுகைகளை கழற்றி விட்டு கருவறைக்குள் சென்று மறைந்தார். அப்போது “என்னைப் பற்றி பாடு'' என அசரீரி கேட்டது. 'பித்தா, பிறைசூடி' என பதிகம் பாடினார். அது முதல் இருவரும் நண்பர்களாயினர். எப்படி செல்வது* கடலுாரில் இருந்து திருக்கோவிலுார் செல்லும் வழியில் 7 கி.மீ.,* விழுப்புரத்தில் இருந்து 23 கி.மீ.,விசேஷ நாள்ஆனி மூலம் புட்டு உற்ஸவம், ஆடி சுவாதியில் சுந்தரர் விழா, பங்குனி தேரோட்டம்நேரம்காலை 6:00 - 11:00 மணிமாலை 5:00 - 8:00 மணி தொடர்புக்கு : 93456 60711அருகிலுள்ள தலம்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோயில் (23 கி.மீ.,) நேரம்: காலை 6:30 - 12:00 மணி மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு: 94862 79990