தாயின் பெயரில் விநாயகர்
தந்தை பெயரின் முதல் எழுத்தை இன்ஷியலாக இடுவது வழக்கம். ஆனால் தாயின் பெயருடன் உள்ள விநாயகர், சென்னை தாம்பரம் அருகிலுள்ள கீழ்படப்பையில் அருள்புரிகிறார். தட்சனின் மகள்களான கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 பெண்களை சந்திரன் மணந்தான். ஆனால் ரோகிணியின் மீது மட்டும் அன்பு காட்டினான். இதனால் வருத்தமடைந்த மற்ற பெண்கள் தட்சனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தட்சன், சந்திரனின் கலைகள் தேயும் படியாக சபித்தான். இதிலிருந்து விடுபட எண்ணி பூலோகம் வந்த சந்திரன், இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு விமோசனம் பெற்றான். அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சுவாமிக்கு வீரட்டேஸ்வரர் என்பது திருநாமம். பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த நந்திவர்ம பல்லவன், ஒரே சமயத்தில் 108 சிவன் கோயில்களுக்கு திருப்பணி செய்து ஒரே நாளில் கும்பாபிேஷகம் நடத்தினார். அதில் இத்தலமும் ஒன்று. இக்கோயிலில் நுழைவு வாயிலை கடந்ததும் சாந்தநாயகி சன்னதி உள்ளது. அம்மனின் பாதத்தின் கீழ் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்மனே பிரதானம் என்பதால் இப்படி அமைத்துள்ளனர். அம்மனை வழிபட்ட பிறகே பக்தர்கள் சிவனை வழிபடுகின்றனர். சன்னதியின் வெளியில் நிற்போர் அம்மனின் முகத்தை தரிசிக்க முடியாதபடி சன்னதி தாழ்வாக உள்ளது. சற்று குனிந்து பார்த்தால் தரிசிக்க முடியும். பணிவை உணர்த்தும் விதமாக இருக்கும் இவளை வழிபடும் பிள்ளைகள் பெற்றோரை மதிப்புடன் நடத்துவர். இத்தலத்து விநாயகர் தாயான சாந்த நாயகியின் பெயரால் 'சாந்த விநாயகர்' எனப்படுகிறார். இவரை தரிசித்தால் தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கோயில் முன்மண்டபத்தில் சந்திரன் சன்னதி உள்ளது. பவுர்ணமியன்று அகோர வீரபத்திரருக்கு வெற்றிலை காப்பிட்டு, விசேஷ பூஜை நடத்தினால் விருப்பம் நிறைவேறும். காளத்தீஸ்வரர், சனீஸ்வரர், வள்ளி, தெய்வானையுடன் முருகன் ஆகியோரும் இங்குள்ளனர். சித்திரை சதயத்தன்று திருநாவுக்கரசர், ஆடி சுவாதியன்று சுந்தரர் குருபூஜை நடக்கிறது. வெள்ளை யானை மீது சுந்தரர் கைலாயம் சென்றதால் யானை வாகனத்தில் எழுந்தருள்வார். இதை தரிசித்தால் பிறப்பற்ற நிலை கிடைக்கும்.எப்படி செல்வது: சென்னை தாம்பரத்தில் இருந்து 13 கி.மீ., விசேஷ நாட்கள்: திருநாவுக்கரசர், சுந்தரர் குருபூஜை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மகா சிவராத்திரி நேரம் : காலை 7:00 - 10:00 மணி; மாலை 5:30 - 8:30 மணிதொடர்புக்கு: 98418 81884அருகிலுள்ள தலம்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் 25கி.மீ.,