கந்தசஷ்டியின் கதை
காஷ்யப முனிவருக்கும், மாயைக்கும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன், அஜமுகி என்னும் நான்கு அசுரப் பிள்ளைகள் பிறந்தனர். காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், ''குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்!'' என்று உபதேசம் செய்தார். அவர்களும் அழியாத வரம் வேண்டி தவம் செய்தனர். சூரபத்மன் முன்தோன்றிய ஈசன், ''உன் தவத்தின் பலனால், உலகிலுள்ள 1008 அண்டங்களையும், 108 யுகம் ஆட்சி செய்வாயாக! என் சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியாலும் உனக்கு அழிவில்லை,'' என்ற வரத்தை தந்தருளினார். இதைஅடுத்து, சூரபத்மன் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று எல்லா உலகங்களுக்கும் மன்னன் ஆனான். தன்னை யாரும் அழிக்க முடியாதென்ற தைரியத்தில், தேவர்களுக்கு பல கொடுமை பல செய்தான். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான். தேவர்கள் சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர்.கருணை கொண்ட பரம சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை சிந்தி ஆறுமுகப் பெருமானை உருவாக்கினார். இந்த ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக 'ஸ்கந்தம்' (சேர்த்தல்) செய்து கந்தன் ஆக்கினாள் பார்வதிதேவி. முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், ''இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை,'' என்றார். தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், ''பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது,'' என்று வீராவேசமாகக் கூறினான்.உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப்பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். முருகப்பெருமான் தன் தாய் உமா தேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை சூரன் மீது விடுத்தார். அவன் மாமரமாக மாறினான். வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்''வைதாரையும் வாழவைப்பவன்' என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது 'கந்தசஷ்டி' ஆயிற்று.