அறிவுக்கு வேலை கொடு : பகுத்தறிவுக்கு வேலை கொடு - வேண்டுகிறார் வேதாத்ரி மகரிஷி
* எல்லா உயிர்களும் வாழத் துடிக்கின்றன. அதிலும் மனிதன் துன்பம் இல்லாத இன்பம் நிறைந்த வாழ்வை வாழ ஆசைப்படுகிறான். ஆனால், துன்பமின்றி வாழும் வகை தெரியாமல் தவிக்கிறான். வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும், வாழும் முறையையும் அறிந்து வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை இன்பமுடையதாக அமையும். * பழக்கத்தின் காரணமாகவும், புலன் கவர்ச்சியாலும், சூழ்நிலையாலும் மனிதர்கள் தவறுகளைச் செய்கிறார்கள். செய்த தவறுகளின் பயனாக துன்பக்குழியில் விழுகிறார்கள். பெரும்பாலானோர் தாம் செய்யும் தவறுகளை உணர்வதில்லை. விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே நாம் செய்யும் தவறுகளை உணரமுடியும். இனிமேல் தவறு செய்வதில்லை என்ற மனவுறுதியோடு வாழ வேண்டும்.* மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம். மனதின் தன்மை எப்படியோ அப்படியே மனிதனின் சிந்தனை, வாழ்க்கை அமைகிறது. மனம் செழுமை கொண்டதாக இருக்கவேண்டும். எண்ணமே வாழ்வு என்று இதைத் தான் குறிப்பிடுகிறார்கள். * மனதை உயர்ந்ததாக, தூய்மையுடையதாக மாற்றிக் கொள்ளும்போது, மனிதவாழ்வு எல்லாவகையும் வெற்றி கொண்டதாக அமைந்துவிடும். * மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கிவிடும். தவறிழைப்பதும் மனம் தான். இனி தவறைச் செய்வதில்லை என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான்.* பழைய வாழ்வியல் முறைகளையே பின்பற்றிக் கொண்டிருந்தால் ஒருநாளும் புதிய பாதைக்கு மனம் செல்லாது. தவறு செய்யாமல் நல்லவழியில் செல்வதற்கான ஆயத்தப்பணிகளை இன்றே துவங்குங்கள். * மனதை சீர்திருத்த, தனக்குத்தானே வைத்தியம் செய்து கொள்ளவேண்டும். சுயபலத்தை உங்களுக்கு நீங்களே ஊட்டியாக வேண்டும். அதை மற்றொருவரிடம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அறிவுடைமையாகாது.* சரியான பாதையில் செல்லத் துவங்கி விட்டால், எல்லையில்லா இன்பநிலையை அடையலாம். அப்போது இன்பமும், அமைதியும் மனதில் ஊற்றெடுக்கும். அந்த பேரின்ப நிலையில் மனிதனும் தெய்வமாகி விடுகிறான். * பெற்றோரிடம் இருந்து கருவிலே வந்த பதிவுகளும், பிறந்தது முதல் நாம் நினைத்த எண்ணப்பதிவுகளுமே நம்மை இயக்குகின்றன. அதில் தேவையான மாற்றங்களைச் செய்து விரும்பியபடி உயர்வாழ்வு வாழ மனவளக்கலைப் பயிற்சி அவசியம். * பாத்திரங்களை அன்றாடம் துலக்கிய பின்பே, மீண்டும் சமையலைத் தொடங்குகிறோம். அதுபோல, ஒவ்வொரு நாளும் மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். இதன் மூலம் மனம் அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து நம் செயல்களுக்கு ஒத்துழைக்கத் துவங்குகிறது.* வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் அனைத்தும் நமக்கு சாதகமாகி விடுவதில்லை. இடையிடையே சிக்கல்களை சந்திக்க வேண்டிவருகிறது. அப்போது, அறிவின் துணை கொண்டு அவற்றிற்குத் தீர்வு காணவேண்டும். பகுத்தறிவுக்கு வேலை கொடுத்தால் தான் சிக்கல்கள் அடியோடு தீரும்.* உண்மையில் மனிதனுக்கு எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அது அவனுடைய மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே. தவறான எண்ணங்களைத் தவிர்க்க வேண்டுமானால், நல்ல எண்ணங்களால் மனதை நிரம்பச் செய்வதேயாகும். * மனிதன் உண்ணுகின்ற உணவு உடலுக்குள் மட்டுமே பாய்கிறது. ஆனால், அவன் எண்ணும் எண்ணங்கள் எங்கும் பாயக்கூடிய ஆற்றல் படைத்தது. * மனதில் எழும் ஆசைகளை அடியோடு ஒழிப்பது யாராலும் முடியாத செயல். அதற்குத் தேவையும் இல்லை. ஆசையைச் சீரமைத்துக் கொண்டு வாழ்வதே சிறந்தது.