உள்ளூர் செய்திகள்

கண் நோய் தீர்க்கும் கருணை தெய்வம்

மதுரை வண்டியூர் மாரியம்மன் கண் நோய் தீர்க்கும் கருணை தெய்வமாகத் திகழ்கிறாள். காவல் தெய்வமான துர்கையம்மன் கோயில் மதுரை நகரின் கிழக்கு எல்லையில் இருந்தது. மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள் போருக்கு செல்லும் முன் இங்கு வழிபடுவர். வறட்சி ஏற்பட்ட காலத்தில் மழை வரம் வேண்டி வழிபட்டதால் காலப்போக்கில் மாரியம்மனாக கருதி வழிபடத் தொடங்கினர். பார்வதியின் வெவ்வேறு வடிவங்களான மாரியம்மன், துர்கை இருவரும் கருவறையில் ஒரே சிலை வடிவில் மூலவராக உள்ளனர். சிரித்த முகத்துடன் இருக்கும் அம்மன் கைகளில் பாசம், அங்குசம் ஏந்தியிருக்கிறாள். இடது காலை தொங்கவிட்டும், வலதுகால் மடித்த நிலையிலும் உள்ளது. காலுக்கு கீழே மகிஷாசுரன் இருக்கிறான்.குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்தும் போது பக்தர்கள் பூ கட்டி அம்மனிடம் உத்தரவு கேட்கின்றனர். மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் விழா நடக்கும் முன் முதல்பூஜை இங்கு நடத்தப்படுகிறது. இங்கு தரப்படும் தீர்த்தத்தை பருகினால் அம்மை குணமாகும். கண் நோய் தீர வெள்ளியால் ஆன கண் மலர் காணிக்கை செலுத்துகின்றனர். தோல் வியாதிக்கு அகல உப்பு, மிளகு செலுத்துகின்றனர். பேச்சியம்மன், அரசமரத்தின் அடியில் விநாயகர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன.செல்வது எப்படி: மதுரை பெரியார் நிலையம் - தெப்பக்குளம் செல்லும் சாலையில் 4 கி.மீ.,விசேஷ நாட்கள்: ஆடி வெள்ளி, தை வெள்ளி, தைப்பூசம், பங்குனி பிரம்மோற்ஸவம் நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணிதொடர்புக்கு: 0452 - 231 1475அருகிலுள்ள தலம்: மதுரை மீனாட்சியம்மன் கோயில்