ஸ்ரீரங்கநாதரை விட பெரியவர்
திருச்சி ஸ்ரீரங்கம் என்றதும் ஸ்ரீரங்கநாதரின் பிரம்மாண்டம் நம் நினைவுக்கு வரும் ஆனால் அவரையும் விட அளவில் பெரியவராக விழுப்புரம் மாவட்டம் ஆதிதிருவரங்கத்தில் ரங்கநாதர் இருக்கிறார். தட்சன் என்பவருக்கு 27 மகள்கள். தேவர்களில் ஒருவரான சந்திரனின் பேரழகில் மயங்கிய அவர்கள், தங்களின் கணவராக ஏற்றனர். ஆனால் அவர்களில் கார்த்திகை, ரோகிணி என்னும் இரு மனைவியரை மட்டும் நேசித்த சந்திரன் மற்றவர்களை புறக்கணித்தான். அழகன் என்ற கர்வத்துடன் அலையும் சந்திரனை பழிதீர்க்க, 'உன் அழகு தொலையட்டும்' என 25 பேரும் சபித்தனர். இத்தலத்தில் மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்த சந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். சந்திரனால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் 'சந்திர புஷ்கரணி' எனப்படுகிறது.'ரங்கநாதர்' என்னும் பெயரில் மகாவிஷ்ணு படுத்த கோலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இவரது சிலையை வடித்தவர் தேவலோக தச்சரான விஸ்வகர்மா. ஸ்ரீரங்கம் 21 அடி நீளமும், இங்கு 28 அடி நீளமும் கொண்டவராக 'பெரிய பெருமாள்' இருக்கிறார். ரங்கநாயகி தாயார், அனுமனுக்கு தனித்தனியே சன்னதிகள் உள்ளன. புரட்டாசி சனிக்கிழமையில் ரங்கநாதருக்கு துளசிமாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். ரங்கநாதர் இத்தலத்தில் இழந்ததை மீட்டுத் தருபவராகவும், குழந்தைப் பேறு அளிப்பதிலும் வரப்பிரசாதியாக திகழ்கிறார். எப்படி செல்வது: விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் வழியாக 62 கி.மீ.,விசேஷ நாள்: புரட்டாசி சனிக்கிழமை, பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசிநேரம்: காலை 6:00 - இரவு 7:30 மணிதொடர்புக்கு: 04153 - 293 677அருகிலுள்ள தலம்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோயில் 16 கி.மீ.,