உள்ளூர் செய்திகள்

அழுத கண்ணீரை ஆனந்த கண்ணீர் ஆக்குபவர்

சிலர் கஷ்டம் தாங்காமல், நமக்கு தெரிந்தவர்களிடம், தங்கள் துன்பத்தைச் சொல்லி அழுவதாக வைத்துக்கொள்வோமே! அவர்கள், நம் அந்தரங்க விஷயத்தை பக்கத்தில் உள்ளவர்களிடமும், உறவுக்காரர்களிடமும், வேண்டாதவர்களிடமும் சொல்லி நம் துன்பத்தை மேலும் அதிகப்படுத்தி விட வாய்ப்புண்டு. எனவே, மனிதனிடம் சொல்வதை விட, கடவுளிடம் கஷ்டத்தை வெளிப்படுத்துவது உசிதம். இப்படி, சொல்லமுடியாத கஷ்டத்தில் இருப்பவர்கள் மதுரை விராதனூரிலுள்ள அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரனிடம் முறையிடலாம். இவர் நம் துன்பம் தீர்த்து அருள்வார்.தல வரலாறு:பல நூறு வருடங்களுக்கு முன், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்தரகோசமங்கை என்ற ஊரிலிருந்து இரு குடும்பத்தினர், தங்கள் குலதெய்வமான அழகர்கோவில் பெருமாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்த வந்தனர். வழியில் விராதனூரில் தங்கி இளைப்பாறினர். தங்கள் குழந்தையை அங்கிருந்த ஆலமரத்தில் தொட்டில் கட்டி உறங்க வைத்தனர். பெரியவர்களும் களைப்பில் உறங்கி விட்டனர். விழித்த போது தொட்டிலில் இருந்த குழந்தையைக் காணவில்லை. அவர்கள் அலறியடித்து தேடிய போது மரத்தின் உச்சியில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஆம்.. குழந்தை ஒரு கிளையில் அமர்ந்திருந்தது. இதைக்கண்ட பெற்றோர் ஆச்சரியமும் கலக்கமும் அடைந்தனர். குழந்தை எப்படி மர உச்சிக்குப் போனது என்பது புரியவில்லை. மேலும், தவறி விழுந்து விட்டால் உயிருக்கு ஆபத்தாகி விடுமே என கண்ணீர் விட்டனர். ''கடவுளே! குழந்தையை காப்பாற்று,'' என கதறினர். அப்போது அசரிரீ ஒலித்தது. அந்த ஊரில் சிவனுக்கு கோயில் அமைத்து வழிபடும்படி கூறியது. சிவனின் கட்டளைப்படி அவர்கள் 'ரிஷபாரூடர்' சிலை பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டினர். பார்வதியும், பரமேஸ்வரனும் காளை மேல் எழுந்தருளியிருக்கும் கோலமே ரிஷபாரூடர் சிலையாகும். குழந்தையை காணாமல் அழுத பெற்றோரின் கண்ணீரை துடைத்ததால், சிவனுக்கு 'அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது.சிறப்பம்சம்:பொதுவாக, சிவன் கோயில்கள் கிழக்கு நோக்கி இருக்கும். இங்கு வாசல் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. பெரும்பாலும் மேலும் மையப் பகுதியில் தான் மூலவர் சந்நிதி இருக்கும். ஆனால் இங்கு வடமேற்கு (வாயுமூலை) திசையில் மூலவர் சந்நிதி அமைந்துள்ளது. தனி மண்டபத்தில் நந்தி, சந்நிதியின் வலப்புறம் பத்ரகாளி, இடப்புறம் வீரபத்திரர், அர்த்த மண்டபத்தில் விநாயகர், முருகன் அருள்பாலிக்கிறார்கள். தென்கிழக்கு அக்னி மூலையில் முத்துக்கருப்பண்ண சாமி, ராக்காயி, சப்பாணி, காவல் கருப்பு, முனியாண்டி போன்ற கிராம தேவதைகளுக்கு சந்நிதி உள்ளது. எல்லா சிவாலயங்களிலும் ரிஷபாரூட மூர்த்தி உப மூர்த்தியாகத்தான் இருப்பார். ஆனால், இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார். பிரதோஷ காலங்களில், நந்திக்குப் பதிலாக மூலவரையே வழிபடலாம் என்பது இக்கோயிலின் சிறப்பு. ரிஷபாரூடர் வரலாறு:அசுரர்கள் தொல்லையினால் தேவர்கள் கயிலாயம் சென்று தங்களை காப்பாற்றும்படி சிவனிடம்முறையிட்டனர். சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்து விட்டது. உடனே, மகாவிஷ்ணு காளை உருவம் கொண்டு சிவனை தன் முதுகில் ஏற்றிச் சென்றார். இதன் பின் சிவனுக்கு 'ரிஷபாரூடர்' என்ற திருநாமம் உண்டாயிற்று. விஷ்ணு இங்கு ரிஷப வாகனமாக (காளை) இருப்பதால் சிவனையும், சக்தியையும், ரிஷப வடிவ பெருமாளையும் ஒரே மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்.இருப்பிடம்:மதுரையிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் விராதனூர். பெரியார் பஸ்ஸ்டாண்டிலிருந்து சிந்தாமணி, பனையூர் வழியாக நெடுங்குளம் பஸ்சில் செல்லலாம். திறக்கும் நேரம்:காலை 7- 8 , மாலை 6- இரவு 8 .போன் :0452-550 4241, 269 8961.