உள்ளூர் செய்திகள்

உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!

* மனதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனே உயர்ந்த மனிதன். வருவதை மலர்ச்சியுடன் ஏற்று வாழ்க்கையைத் திறம்பட அவனால் நடத்த முடியும்.* மனதில் எழும் தீய ஆசைகளை களைந்து விட்டால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம். அப்போது வேண்டாத பரபரப்புக்கோ, பதட்டத்திற்கோ தேவை இருக்காது.* கீழ் குணம் படைத்த மனிதர்கள், வெறுமனே சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், பொருள்களைச் சேர்ப்பதிலுமே காலத்தைக் கடத்துகிறார்கள்.* நடுநிலைமையோடு வாழ்பவன் மனதில், அமைதி எப்போதும் இருக்கும். அப்படிப்பட்டவன் இன்பத்தைக் கண்டு துள்ளவோ, துன்பத்தைக் கண்டு துவளவோ மாட்டான். பேசுவது ஒன்று, செயல்படுத்துவது ஒன்று என நேரத்துக்கு ஏற்ப நடித்து முடிவை மாற்றிக்கொள்பவனை மனிதனின் வரிசையில் சேர்க்க முடியாது.* நோய் வருத்தினாலும், பெருந்துன்பம் நேர்ந்தாலும், ஆசை எண்ணம் அலைக்கழித்தாலும் மனிதன் நடுநிலையில் இருந்து தவறக்கூடாது.* சாந்தம் மனிதனுக்கு அழகைத் தருகிறது. வாழ்வில் உயர வேண்டுமானால் சாந்த உணர்வு ஒருவனுக்கு மிக அவசியம்.* உலகம் துன்பம் நிறைந்த காடாக இருக்கிறது. இடைவிடாமல் மனதில் எழும் ஆசைகளால் மனிதன் தினமும் புதிய துன்பத்திற்கு ஆளாகிறான். பகுத்தறிவே துன்பத்தைத் துடைக்கும் சிறந்த மருந்து. * அறிவு என்னும் சிங்கம், நம் மனதில் உண்டாகும் யானை போன்ற பெருந்தவறுகளைக் கிழித்தெறிந்து விடும்.* விஷச் செடிபோல மற்றவர்களுக்குத் துன்பம் தரும் நல்ல எண்ணம் இல்லாதவர்களைத் தவிர்த்து விடு. எந்த நிலையிலும் சோம்பலை உதறித்தள்ளு.* உலகில் யாவும் முதலில் அழகாகத் தோன்றும். ஆனால், பகுத்தறிவைக் கொண்டு பார்க்கும்போது தான் உண்மையான நிலை புரியத் தொடங்கும்.* சத்தியத்தை உணர்ந்தவர்கள் அறிவு வழியில் நடப்பார்கள். தீமை, பொய்யைப் புறக்கணித்து நேர்வழியில் செல்வார்கள்.* மனதிருப்தி தான் மகிழ்ச்சி. இருப்பதை வைத்துக் கொண்டு மனஅமைதியுடன் இருப்பவனே மேலானவன். அப்படிப்பட்டவனுக்கு ராஜபோகம் கூட வெறும் துரும்பு போலத் தான்.* நல்லவர்களின் சேர்க்கையை விட்டுவிடாதே. நல்லவர்களின் உறவால் ஞானம் உண்டாவதோடு, வாழ்வில் எல்லாச் செல்வமும் வந்து சேரும்.* மழை பெய்தால் எப்படி பூக்களில் தூசி நீங்கி பிரகாசம் ஏற்படுகிறதோ, அதுபோல நல்லவர்களின் சேர்க்கையால் அறிவு பிரகாசிக்கும்.* செல்வத்தால் கிடைக்கும் இன்பத்தை விட, மனநிறைவால் உண்டாகும் இன்பமே மேலானது. * சுய முயற்சியால் எதை அடைய நாம் விரும்புகிறோமோ, அந்த இலக்கை அடைந்தே தீருவதென்று பாடுபடு.* சிறிது சிறிதாக முயற்சி மேற்கொண்டு வா. தீமைகள் நிறைந்த ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் ஆசைகளின் திசையை மாற்றி நன்மை தரும் கரையை அடைய முயற்சி செய். சொல்கிறார் வசிஷ்டர்