தலவிருட்சங்கள் - 18
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் -- மகிழ மரம்திருமாலைப் போல காத்தல் தொழிலையும், சிவபெருமானைப் போல் அழித்தல் தொழிலையும் தன்னாலும் செய்ய முடியும் என படைப்புக் கடவுளான பிரம்மா கர்வம் கொண்டார். அதைப் போக்க எண்ணிய சிவபெருமான் அவரது ஐந்து தலைகளில் ஒன்றை கொய்து நான்முகனாக மாற்றினார். அத்துடன் படைப்புத் தொழிலையும் செய்ய விடாமல் சபித்தார்.பிரம்மாவுக்கு சாப விமோசனம் தருமாறு சிவனிடம் தேவர்கள் வேண்டினர். இதன் பயனாக திருப்பட்டூர் என்னும் திருத்தலத்தில் சிவபூஜை செய்து மீண்டும் படைப்புத் தொழிலில் ஈடுபட்டார். பிரம்மா வழிபட்ட சிவபெருமானே 'பிரம்மபுரீஸ்வரர்' என்னும் பெயரில் திருப்பட்டூரில் இருக்கிறார். இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகியுடன் கோயில் கொண்டிருக்கிறார். அம்மனுக்கு பிரம்ம சம்பத்கவுரி என்றும் பெயருண்டு. இங்கு வருவோரின் தலையெழுத்தை மாற்றுபவராக பிரம்மா இருக்கிறார். வியாழக்கிழமை, குருப்பெயர்ச்சி நாட்களில் பிரம்மாவின் சன்னதியில் ஜாதகத்தை வைத்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் பிரம்மபுரீஸ்வரர், பழமலைநாதர், பாதாள ஈஸ்வரர், சுத்த ரத்தினேஸ்வரர், தாயுமானவர், சப்தரிஷிஸ்வரர், காளத்திநாதர், ஜம்புகேஸ்வரர், கைலாசநாதர், அருணாச்சலேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், மண்டூகநாதர் என பன்னிரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. பன்னிரண்டு சிவலிங்கங்களின் மீதும் சூரியஒளி படுமாறு இருப்பது சிறப்பு. சூரியன் தினமும் 7 நிமிடம் பிரம்மபுரீஸ்வரர் சன்னதியிலும், அடுத்த 7 நிமிடம் அம்மன் சன்னதியிலும் தன் கதிர்களை பரப்பும் விதத்தில் கோயில் அமைந்திருப்பது கட்டடக்கலைக்குச் சான்று. பிரம்மாவுக்கு மஞ்சள் நிறச் சந்தனக்காப்பும், மஞ்சள் சேர்த்த புளியோதரையும் பிரசாதமாக தரப்படுகிறது. பதஞ்சலி முனிவரின் முக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்று. மூட்டுவலி, தண்டுவட கோளாறு தீர அமாவாசையன்று பதஞ்சலி முனிவர் ஐக்கியமான இடத்திலுள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. சோகம், கவலையால் சிரமப்படுபவர்கள் தங்களின் தலையெழுத்தை மாற்றிட பிரம்மாவை வணங்கி பன்னிரண்டு சிவலிங்கத்தையும் வலம் வருகின்றனர். இங்கு தலவிருட்சம் மகிழ மரம். மைமுசூப்ஸ் இலஞ்சி (Mimusopselengi) என்னும் தாவரவியல் பெயரையும், சப்போட்டேசியே குடும்பத்தையும் சேர்ந்த மகிழ மரத்திற்கு இலஞ்சி, கேசரம், வகுணம் என்றும் பெயருண்டு. சித்தர் போகர் பாடிய பாடல்மகிழினுடப் பெயர்தனையே வழுத்தக்கேளுவகுளீது சுகந்தோத்த மத்தியகெந்தம்விகிழினுட விசாரதம்மிது கெந்தாவாமடுக்கான கூடபுஷ்ப சிங்கியுமாகுங்கெகிழினுட கேசாகச் சத்தசாவாங்கெடியான சாதுசீ தளமுமாகும்நெகினுட விஷஅரிவா தக்கினியாகும்நேரான மகிழினுட நாமமாமே. சுகந்தோத்தம், மத்ய கந்தம், விசாரதம், கந்தாவம், புஷ்ப சிங்கி, கேசாகசத்தவாம், அறிவாதக்கினி என்ற பெயர்களால் மகிழ மரம் அழைக்கப்படுவதாக போகர் குறிப்பிடுகிறார். சித்தர் அகத்தியர் பாடிய பாடல்வெருவனல் மாகும் விரகமிக வுண்டாம்முசுர அரோசி முறியும்-மிகவும்மகிழச் சுரத வகைகாட்டு மாதே!மகிழத் துரும மலர்க்கு.மகிழம்பூவை முகர்ந்தால் இளைப்பு நீங்கி மனதில் சந்தோஷம் உண்டாகும். சுவையின்மை நீங்கும். நேரிட்டவர்க் கிளைப்பை நீக்கிப் பிணியிபத்தைவீரிட் டலற விரட்டுமே-சீரிட்டவாச மலரின் மணத்தாற் குணத்தோடகேசரமென் றோது மகிழ்.மகிழம்பூவைக் கஷாயமிட்டு குடிக்க சூடு தணியும். பொடி செய்து நுகர சைனஸ் தொல்லையால் ஏற்படும் தலைவலி மறையும். சித்தர் தேரையர் பாடிய பாடல்தாதுவைநன் மெய்யழகைக் சத்தியையுண் டாக்கிவிடுஞ்சீதளமென் பார்வலிக்கஞ் செய்மருந்தாம் - வாதைமலத்தைவிழித் தோஷத்தை வல்விஷத்தை வெப்பைவிலக்கு மகிழம் விதைமகிழ மரத்தின் விதைகளை எண்ணெய்யில் ஊற வைத்து, கண்களில் விட கண் நோய் விலகும். குளிர்ச்சி தரும். பிரசவத்தை எளிமைப்படுத்த மகிழம்பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம். பழங்களில் ஊறுகாய் செய்தும் உண்ணலாம். மகிழம் பூக்களை திருநீறுடன் சேர்த்தால் அதன் நறுமணம் அதிகரிக்கும். எப்படி செல்வது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 30 கி.மீ., தொலைவில் சிறுகனுார். அங்கிருந்து 4 கி.மீ.,நேரம்: காலை 7:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 98431 19950-தொடரும்ஜெ.ஜெயவெங்கடேஷ்98421 67567