புண்ணியம் செய்தவர்கள் கண்களில் இது படும்!
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்குள் இருக்கும் தனிக்கோயிலான அசலேஸ்வரர் (அரநெறியப்பர்) கோயில் பற்றி நாம் பூர்வத்தில் புண்ணியம் செய்திருந்தால் தான் தெரிந்து கொள்ளவே முடியுமாம். அப்படியானால், இங்கு போய் வந்தால் கிடைக்கும் புண்ணியத்தின் அளவை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.தல வரலாறு: நமிநந்தியடிகள் என்பவர், திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குள் உள்ள அசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் வந்து வழிபடுவார். ஒருநாள் மாலையில் வழிபாடு செய்ய வந்த இவர், கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டதை பார்த்தார். தொலைவிலுள்ள தனது வீட்டிற்கு சென்று நெய் எடுத்து வருவதற்குள் விளக்கு அணைந்துவிடும் என்பதால், கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார். அந்த வீட்டில் வேறு மதத்தவர்கள் குடியிருந்தனர். அவர்கள்,''கையில் அக்னி ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா? அந்த தீயின் ஒளியே போதுமே. உங்கள் சிவன் தான் சக்தியுள்ளவர் என்கிறாயே! நீ விளக்கேற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே?''என்று கேலி செய்தனர். இந்த கேலிப்பேச்சு கேட்டு நந்தியடிகளின் உள்ளம் புண்ணாகி விட்டது. வருந்திய அடிகள் சுவாமியிடம் திரும்பி வந்து, ''உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் உன்னையும் கேலி செய்ததைப் பார்க்கத்தானே செய்தாய். இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேனோ?''என புலம்பினார். அப்போது அசரிரீ, ''நமிநந்தி! கலங்காதே. அவர்களை இங்கே அழைத்து வா. அவர்கள் கண் முன்னாலேயே குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று,''என்று ஒலித்தது.மகிழ்ந்த அடிகள், அங்கிருந்த சங்கு தீர்த்தத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். கோயில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதைப் பார்த்த கேலியாளர்கள் ஆச்சரியமடைந்தனர். சோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோயிலுக்கு தலைவராக்கி, திருவிழாக்கள் நடக்க உதவினான். நமிநந்தியடிகள் நாயன்மார்களில் ஒருவராகவும் ஆனார். தல சிறப்பு: அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் விமானம் போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. இத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்தக்கோயிலுக்குள் செல்ல முடியும் என்ற ஐதீகம் நீண்ட காலமாக இருக்கிறது. திருவிழா: மார்கழி திருவாதிரை. மாசி சிவராத்திரி.திறக்கும் நேரம்: காலை 5- 12, மாலை 4- 9 மணி.இருப்பிடம்: திருவாரூர் நகரின் நடுவில் உள்ள தியாகராஜர் கோயிலுக்குள் இரண்டாம் பிரகாரத்தில் இக்கோயில் உள்ளது.போன்: 04366 -242 343.