மல்லிகை மகாலட்சுமி
தீபாவளி நன்னாளில் லட்சுமி கடாட்சம் பெற பூவில் அவதரித்த சென்னை பூந்தமல்லி புஷ்பவல்லித் தாயாரை தரிசிப்பது சிறப்பு. ராமானுஜரின் குருநாதர் திருக்கச்சி நம்பிகள் பிறந்த தலம் இது.கி.பி. 1009ல் இங்கு வாழ்ந்த வீரராகவர், கமலாயருக்கு மகனாக பிறந்தவர் திருக்கச்சி நம்பிகள். தினமும் காஞ்சிபுரம் வரதராஜரை வழிபடும் வழக்கம் கொண்ட இவர் ஆலவட்ட சேவை (விசிறி வீசுதல்) செய்தார். ஆனால் முதுமையில் இவரால் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லை. அப்போது, காஞ்சி வரதராஜரே பூந்தமல்லிக்கு நேரில் காட்சியளித்தார். அந்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.புண்ணியகோடி விமானத்தின் கீழ் பின் தலையில் சூரியனுடன் மூலவர் இருக்கிறார். சூரியத்தலமான இங்கு ஞாயிறன்று வழிபடுவது சிறப்பு. பிறந்த ஜாதகத்தில் சூரிய தசை நடப்பவர்கள், தந்தை, மகன் கருத்து வேறுபாடு கொண்டவர்கள், உடல்நலம் இல்லாதவர்கள் செவ்வரளி மாலை சாத்தி வழிபடுகின்றனர்.இங்குள்ள தாயார் மல்லிகைப்பூவில் அவதரித்ததால் புஷ்பவல்லித்தாயார் எனப்படுகிறார். இதனால் 'பூவிருந்தவல்லி' எனப்பட்ட இத்தலம் பிற்காலத்தில் 'பூந்தமல்லி' என மாறியது. தாயாருக்கு வெள்ளிக்கிழமையில் மல்லிகை மாலை சாத்தினால் நினைத்தது நிறைவேறும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். வைகாசி திருவிழாவின் போது புஷ்ப யாகம் பெரிய அளவில் நடக்கும். அப்போது பள்ளியறையில் சயனக்கோலத்தில் பெருமாள் காட்சியளிப்பார். பெருமாளுக்கு விசிறி சேவை செய்ய விரும்பிய திருக்கச்சி நம்பிகள் முதலில் ஸ்ரீரங்கம் சென்றார். 'காவிரிக்கரை குளிர்ச்சியாக இருப்பதால் தனக்கு விசிறி சேவை வேண்டாம்' என ரங்கநாதர் தெரிவித்தார். பின்னர் அவர் திருப்பதி சென்ற போது, 'மலை மீது குடியிருப்பதால் தனக்கும் சேவை வேண்டாம்' என்றார் ஏழுமலையான். இறுதியாக காஞ்சிபுரத்தில் வரதராஜர் யாகத்தீயில் தோன்றியவர் என்பதால் உக்கிரமாக இருப்பதைக் கண்டு விசிறி சேவையைத் தொடங்கினார். இங்கு நம்பிகளால் வழிபடப்பட்ட ரங்கநாதர், ஏழுமலையான் சன்னதிகள் உள்ளன. மூவருக்கும் தனித்தனி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. பங்குனி மாதம் மூவரும் திருக்கச்சி நம்பிக்கு கருட சேவை அளிப்பர். மாசி மாதம் திருக்கச்சி நம்பியின் அவதார விழா நடக்கும்.எப்படி செல்வது : சென்னை - காஞ்சிபுரம் வழியில் 20 கி.மீ.,விசஷே நாட்கள்: ராமானுஜ ஜெயந்தி, திருக்கச்சி நம்பிகள் அவதார விழா, வைகுண்ட ஏகாதசி, மாசி மகம், பங்குனி உத்திரம் நேரம்: காலை 6:30- - 11:30 மணி; மாலை 4:30 - - 08:30 மணிதொடர்புக்கு: 98401 22515, 044 - 2627 2066அருகிலுள்ள தலம்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோயில் (21 கி.மீ.,)