உள்ளூர் செய்திகள்

ஜோதிர்லிங்கம் (9) - நாகதோஷம் போக்கும் நாகநாதர்

ஜோதிர்லிங்கத்தலமான நாகநாதம் நாகநாதர், நாகதோஷத்தில் இருந்து பக்தர்களைக் காப்பவராக வீற்றிருக்கிறார். இந்த ஊரை அவுண்டா என்று குறிப்பிடுகின்றனர். குஜராத் மாநிலம் பார்பஹானி மாவட்டத்தில் உள்ளது. தல வரலாறு: நாகநாதம் இருந்த இடம் தாருகாவனம் என அழைக்கப்பட்டது. இங்கிருந்த முனிவர்கள் தங்களால் தான் இந்த உலகம் நடப்பதாக கர்வம் கொண்டனர். அவர்களை அடக்க சிவன், பிச்சாடன மூர்த்தியாக உருமாறி பெண்களை மயக்கும் பேரழகுடன் காட்சியளித்தார். அவரைக் கண்ட முனிவர்களின் மனைவிகள் தங்களுக்கு திருமணமானதை மறந்து கன்னிகளாக கருதிக் கொண்டு அவர் பின்னால் புறப்பட்டனர். இதைக்கண்ட முனிவர்கள் அப்பெண்கள் அனைவரும் கற்பிழந்ததாக கருதி விரட்டியடிக்க முடிவெடுத்தனர். பிட்சாடனர் காட்டின் உள்ளே சென்று ஒரு குளக்கரையில் இருந்த பாம்புப்புற்றுக்குள் மறைந்தார். சிறிது நேரத்தில் புற்றிலிருந்து ஒளி வந்தது. புற்றிற்குள் பார்த்த முனிவர்களுக்கு சிவன் ஜோதிர்லிங்கமாக காட்சியளித்தார். தங்களின் ஆணவத்தை போக்க சிவனே வந்ததை அறிந்த முனிவர்கள் இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர். அப்பெண்களும் சுயநினைவை திரும்ப அடைந்தனர். லிங்கத்தின் மீது நாகப்பாம்பு படமெடுத்து குடைபிடித்தது. எனவே அவருக்கு 'நாகநாதர்' என பெயர் ஏற்பட்டது. நாகநாதரை வழிபட்டால் நாகதோஷம் நீங்கும்.அம்பிகையும் நாகேஸ்வரியாக அருள்கிறாள்.கோயில் அமைப்பு: முதல் ஜோதிர்லிங்கத் தலமாக இக்கோயில் விளங்குகிறது. கோயில் கோபுரம் கூம்பு வடிவில் உள்ளது. கருவறைக்குச் செல்ல, நான்கடி நீளம், நான்கடி அகலம் உள்ள சுரங்கப் பாதைக்குள் நுழைய வேண்டும். அங்கு சதுர வடிவ துவாரம் இருக்கும். அதன் வழியே குதித்து இறங்கினால் சிறிய அறையில் நாகநாதர் காட்சி தருகிறார். ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடுவதால் நெருக்கடியாக இருக்கும். சுவாமி முன் நிமிர்ந்து நிற்க முடியாமல் கூரை தலையில் தட்டும். மூலவரைச் சுற்றி அமர்ந்தபடியே தரிசிக்க வேண்டும். லிங்கமும் மிகச் சிறியது. வெள்ளை கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். அங்கிருக்கும் அர்ச்சகர் (பண்டா) கவசத்தை அகற்றி லிங்கத்தைப் பார்க்க ஏற்பாடு செய்வார். ஒரே நேரத்தில் அதிகமாக செல்வதால் மூச்சுத்திணறல் கூட ஏற்படுவதுண்டு. வயதானவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இருப்பிடம்: சென்னையில் இருந்து அவுரங்காபாத் சென்று, அங்கிருந்து 210 கி.மீ., கடந்தால் நாகநாதத்தை அடையலாம்.- அர.சிங்கார வடிவேலன், கண்டனூர்