தீர்த்தவாரி காணும் கும்பகோணம் ராமசுவாமி
அயோத்தியில் காட்சியளிப்பதைப் போல ராமர் சகோதரர்களுடன் கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் வீற்றிருக்கிறார். மாசிமகத்தன்று ராமர் சீதையுடன் இங்கிருக்கும் மகாமக குளத்திற்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குகிறார். தல வரலாறு:தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதன் பயனாக விஷ்ணுவை மகனாக பெறும் பேறு பெற்றார். சித்திரை புனர்பூசம் நட்சத்திரம், நவமி திதியன்று குழந்தை பிறந்தது. அவரே ராமபிரான். தசரதரின் முதல் மனைவி கவுசல்யா ராமனை பெற்றெடுத்த புண்ணியவதி. இதையடுத்து விஷ்ணுவின் கையிலுள்ள சக்கரம் பரதன் என்ற பெயரில், ராமன் பிறந்த மறுநாள் பூசத்தன்று, இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் அவதரித்தது. விஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷன் தசரதரின் மூன்றாம் மனைவி சுமித்திரையின் வயிற்றில் ஆயில்யத்தன்று லட்சுமணராகப் பிறந்தது. அதே நாளில் அவளுக்கு சத்ருக்கனன், விஷ்ணுவின் சங்கின் அவதாரமாக அவதரித்தார். ராமனுக்கும், லட்சுமணனுக்கும் உடன் பிறந்த சகோதரிகளான சீதையும், ஊர்மிளாவும் மனைவி ஆயினர். பரத சத்ருக்கனருக்கு ஜனகரின் தம்பி குசத்வஜனின் மகள்களான மாண்டவி, சுருதகீர்த்தி மனைவியாயினர். 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்ற ராமர், ராவணவதம் முடிந்தபின் அயோத்தியில் பட்டம் ‹டிக் கொண்டார். அப்போது தம்பியர் மூவர், மனைவி சீதை, தனக்கு சேவை செய்த அனுமனோடு கொலு வீற்றிருந்தனர். இதேகோலத்தில் ராமருக்கு கும்பகோணத்தில், கோயிலை ரகுநாதநாயக்கர் கட்டினார்.சகோதரர்களுடன் ராமர்:ராம சகோதரர்கள் உத்தரபிரதேசத்திலுள்ள அயோத்தி, சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டணம், கும்பகோணம் ராமசுவாமி கோயில் ஆகிய இடங்களில் சேர்ந்து காட்சி தருகின்றனர். அயோத்தியில் சீதாராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். கும்பகோணத்தில் திருமண கோலத்தில் ஒரே பீடத்தில் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், பூவராக சுவாமி உள்ளனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் சந்நிதி இங்குண்டு. வீணையுடன் ஆஞ்சநேயர்:அனுமனைக் கதாயுதத்துடன் தான் காண முடியும். ஆனால், இங்கு ராமனின் செவி குளிர வீணை இசைத்தபடி காட்சி அளிக்கிறார். ஒரு கையில் ராமாயண சுவடி உள்ளது. ராமசரிதத்தை அனுமன் வீணை இசைத்துப் பாடுவதாக ஐதீகம். ராமனின் இடதுபுறம் சத்ருக்கனன் சாமரம் வீசியபடியும், வலதுபுறம் பரதன் குடைபிடித்தும் நிற்கின்றனர். லட்சுமணன் வில்லுடன் பாதுகாவல் செய்கிறார்.திருவிழா: மாசிமகத்தன்று சீதாராமர் மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். இதை தரிசிப்பதால் சகோதர ஒற்றுமை, தம்பதி ஒற்றுமை வலுப்படும்.இருப்பிடம் :கும்பகோணம் பெரிய கடைவீதி.திறக்கும் நேரம் :காலை 6 - 11.30 , மாலை 5- இரவு 8.30.