உள்ளூர் செய்திகள்

அண்ணாமலையில் குண்டுக்கிருஷ்ணர்

திருவண்ணாமலை என்றாலே சிவன் தான் நினைவுக்கு வருவார். அண்ணாமலையார் கோயிலுக்கு அருகில் வடக்கு மாட வீதியில் பூதநாராயணர் என்னும் பெயரில் பெருமாளுக்கு கோயில் உள்ளது. குண்டுக்கிருஷ்ணரான இந்த பெருமாளை திருவோண நட்சத்திரத்தன்று தரிசிப்பது விசேஷம். குழந்தை கிருஷ்ணரால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், அவனைக் கொல்ல பூதனை என்ற அரக்கியை அனுப்பினான். அவள் ஒரு அழகியாக உருவெடுத்து, ஆயர்பாடிக்கு வந்தாள். யசோதைக்கு தெரியாமல் கிருஷ்ணரைத் துாக்கிச் சென்று பாலுாட்டினாள். அவரும் பாலைக் குடிப்பது போல அரக்கியின் உயிரையே குடித்து விட்டார். ஆனால் தனக்கு பாலுாட்டியவள் என்பதால் தாய்மைக்கு மதிப்பளித்து அவளின் பெயரை தன்னுடன் இணைத்துக் கொண்டு 'பூத நாராயணர்' எனப் பெயர் பெற்றார். பெயருக்கேற்ப குண்டான இவருக்கு பிற்காலத்தில் மன்னர் ஒருவர் கோயில் கட்டினார். காலப்போக்கில் அது மண்ணில் புதைந்தது. பிற்காலத்தில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி பூமியில் புதைந்து கிடப்பதை கனவில் உணர்த்தினார் கிருஷ்ணர். சிலை கண்டெடுக்கப்பட்டு மீண்டும் கோயில் உருவாக்கப்பட்டது.குழந்தை கிருஷ்ணர் இடது காலை மடித்து வலது காலை தரையில் குத்திட்டு அமர்ந்திருக்கிறார். வலது கையில் சங்கு உள்ளது. இடதுகை அபய முத்திரை காட்டுகிறது. குழந்தை வரத்துக்காக வெண்ணெய், கல்கண்டு படைத்து துளசி மாலை சாத்தி வழிபடுகின்றனர்.கோபம், பொறாமை, காமம் போன்ற தீய குணங்களையே அரக்கர், அரக்கிகளாக புராணங்களில் உருவகம் செய்துள்ளனர். அரக்கியை வதம் செய்தவராக கிருஷ்ணர் இங்கிருப்பதால் தரிசிப்போருக்கு நல்ல புத்தி உண்டாகும். வடக்கு மாடவீதி கிரிவலப்பாதையில் உள்ள இக்கோயிலில் வழிபட்டு கிரிவலம் துவங்கி, இவரது சன்னதியில் முடிக்க வேண்டும். கருடாழ்வார், தும்பிக்கையாழ்வார், அனுமன் சன்னதிகள் உள்ளன. எதிரி பயம் விலகவும், செயல்களில் வெற்றி கிடைக்கவும் சக்கரத்தாழ்வாருக்கு புதன்கிழமையில் துளசி மாலை அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைக்கின்றனர். திருவோணம், பவுர்ணமி நாட்களில் திருமஞ்சனம் நடக்கும்.திருவண்ணாமலையிலுள்ள பழமையான பெருமாள் கோயில் இது. வைகுண்ட ஏகாதசியன்று கருட வாகனத்தில் பூதநாராயணர் எழுந்தருள்வார். புரட்டாசி கடைசி சனியன்று ஒரு மூடை அரிசியை சமைத்து சுவாமிக்கு நைவேத்யம் படைக்கின்றனர்.எப்படி செல்வது: திருவண்ணாமலை வடக்கு மாட வீதிவிசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி நேரம்: அதிகாலை 5:00 - 10:30 மணி; மாலை 5:00 - 8:30 மணிதொடர்புக்கு: 96778 56602அருகிலுள்ள தலம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்நேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மதியம் 3:30 - 9:30 மணிதொடர்புக்கு: 04175 - 252 438, 254 425