உள்ளூர் செய்திகள்

கல்யாண விளக்கை எடுக்கச் செல்வோமா!

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர் கோயிலில் மாசிமகத்தன்று நடக்கும் தெப்பத்திருவிழா புகழ்மிக்கது. அன்று, தெப்பக்கரையில் வைக்கப்படும் விளக்கு ஒன்றை எடுத்து வந்தால், அடுத்த மாசிமகத்திற்குள் திருமணயோகம் உண்டாகும். தல வரலாறு: இரண்யன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். தங்களை காக்கும்படி விஷ்ணுவிடம் முறையிட்டனர். பூலோகத்தில் கதம்ப மகரிஷி தவமிருந்த இடத்தில் அனைவரும் ஒன்று கூடினர். அப்போது, நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப் போவதாக விஷ்ணு முடிவெடுத்தார். தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் நரசிம்ம வடிவத்தை இப்போதே காட்டியருள வேண்டும் என வேண்டினர். விஷ்ணுவும் நரசிம்மராக காட்சியளித் தார். அத்துடன் நின்ற, கிடந்த (சயன), இருந்த, நடந்த கோலங்களிலும் காட்சியளித்தார். இந்த புண்ணியத்தலமே திருக்கோஷ்டியூர். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் 'திருக்கோஷ்டியூர்' என்றானது. தேவர்கள் கோஷ்டியாக வந்ததாலும் 'கோஷ்டியூர்' ஆனதாகச் சொல்வர்.சவுமிய நாராயணர்:இங்குள்ள பெருமாள் சவுமிய நாராயணர் எனப்படுகிறார். பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு மது, கைடபர், இந்திரன், புருரூவ சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்ரி ஆகியோரும் சந்நிதியில் உள்ளனர். சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். 'பிரார்த்தனை கண்ணன்' என்னும் இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் உண்டாகும். இரண்யவதம் முடியும் வரை இங்கு தங்கிய இந்திரன், தான் வழிபட்ட சவுமிய நாராயணர் சிலையை கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். அந்தச் சிலையே உற்சவமூர்த்தியாக உள்ளது. பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார்.நான்கு கோலங்கள்:கோயிலின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமிய நாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாம் அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என நான்கு நிலைகளில் பெருமாள் காட்சியளிக்கிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச்சந்நிதி உ<ள்ளது. இங்குள்ள அஷ்டாங்க விமானம் புகழ்மிக்கது. 'ஓம்', 'நமோ', 'நாராயணாய' எனும் பதங்களை உணர்த்தும் விதமாக மூன்று தளங்களாக உள்ளது.மாசிமக விளக்கு நேர்த்திக்கடன்:திருமணத்தடை நீங்குவதற்காக, இங்கு நடக்கும் விளக்கு நேர்த்திக்கடன் புகழ் மிக்கது. பக்தர்கள் ஒரு அகல் விளக்கை வாங்கி பெருமாள் சந்நிதியில் வைத்து, பின், வீட்டிற்கு கொண்டு செல்வர். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறிய பெட்டியில் வைத்து மூடி விடுவர். அதில் பெருமாளும், லட்சுமியும் இருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் வேலைவாய்ப்பு, திருமணம் போன்ற விருப்பங்கள் விரைவில் நிறைவேறும். இன்னொரு விதமாகவும் சிலர் திருமண வேண்டுதல் செய்வர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி மகத்தன்று தெப்பக்குளக்கரையில் தாங்கள் ஏற்கனவே கொண்டு சென்ற விளக்குடன் மற்றொரு விளக்கையும் சேர்த்து ஏற்றுவர். திருமணமாகாத ஆண், பெண்கள் அந்த விளக்கு அணையும் வரை காத்திருந்து வீட்டிற்கு எடுத்துச் சென்று, பெட்டியில் வைத்து விடுவர். அடுத்த ஆண்டுக்குள் வேண்டுதல் நிறைவேறி விட்டால், அந்த விளக்குடன் இன்னும் ஒரு விளக்கை சேர்த்து ஏற்றி வேண்டுதலை பூர்த்தி செய்வர். மாசிமகம் மட்டுமின்றி, மகநட்சத்திரம் வரும் மற்ற நாட்களிலும் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.மகாமக கிணறு:புருரூவ சக்கரவர்த்தி இங்கு திருப்பணி செய்த போது மகாமக விழா வந்தது. அப்போது, அவர் பெருமாளை தரிசிக்க விருப்பம் கொண்டார். கோயிலின் ஈசான்ய (வடகிழக்கு) திசையிலுள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் நடுவில் பெருமாள் காட்சிஅளித்தார். இக்கிணறு 'மகாமக கிணறு' எனப்படுகிறது. 12 வருடத்திற்கு ஒருமுறை வரும் மகாமகத்தன்று இங்கு கருடசேவை நடக்கிறது.இருப்பிடம்:மதுரையிலிருந்து 62 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர். அங்கிருந்து 8 கி.மீ., திறக்கும் நேரம்:காலை 6 - மதியம் 12, மாலை 4- இரவு 8.போன்:04577 261 122.