உள்ளூர் செய்திகள்

வாழ்க்கை சோலையாக...

பக்தர்களின் கஷ்டத்திற்கு தெய்வமே நேரில் வந்து உதவி செய்யும். அவர் தர்மத்தை மீறும் போது அந்த தெய்வமே தண்டிக்கும் என்பதை விருதுநகர் மாவட்டம் சுந்தரநாச்சியார்புரத்தில் அருள்பாலிக்கும் சுந்தர நாச்சியம்மனை தரிசித்தால் நம் வாழ்வு சோலையாகும்.முன்பு சோலையாக இருந்த இவ்விடத்தில் பலர் தோட்ட வேலைகளை செய்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு பெண்ணிற்கு அருள் வந்து, 'என் பெயர் 'சுந்தரநாச்சி' எனக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்யுங்கள்' என உத்தரவிட்டாள். அதன்படியே மக்கள் வழிபாடு செய்யத் தொடங்கினர். இக்கோயிலின் அர்ச்சகர் வறுமையால் சிரமப்பட்டார். அதைப் போக்க எண்ணிய அம்மன் 'கோயில் வாசலில் தினமும் நாணயம் இருக்கும். அதை எடுத்துக் கொள். உன் வறுமை நீங்கும்' என அசரீரியாக சொன்னாள். அதன்படியே வறுமை நீங்கப் பெற்று வாழ்ந்தார் அர்ச்சகர். அவரது மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டது. அன்றும் அவரது கனவில், 'கோயில் வாசலுக்கு கீழே உள்ள பொற்களஞ்சியத்தில் கையளவு பொன் எடுத்துக்கொள்' என அம்மன் தெரிவித்தாள். ஆனால் பொற்களஞ்சியத்தைக் கண்ட அர்ச்சகருக்கு பேராசை தோன்றியது. அம்மனின் வாக்கை மீறினார். அங்கு ஆவேசத்துடன் தோன்றிய அம்மன் தன்னுள் அவரை உள்வாங்கிக் கொண்டு மறைந்தாள். குடும்பத்தாரிடம் நடந்ததை தெரிவித்ததோடு, திருமணத்தையும் தானே முன்னின்று நடத்தினாள். அந்த பெண்ணின் பரம்பரையினரே தற்போது பூஜை செய்து வருகின்றனர். கருவறையில் மந்தகாச புன்னகையுடன் எட்டு கைகளில் ஆயுதங்கள் தாங்கியும், வலது காலை மடித்தும் இடது காலை தொங்க விட்டும் அக்னி கிரீடத்துடன் காட்சி தருகிறாள். விநாயகர், முருகன், அனுமன், கருப்பசாமி, சப்தகன்னியர் சன்னதிகள் உள்ளன. எப்படி செல்வது: ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து 15 கி.மீ., விசேஷ நாள்: வெள்ளி, செவ்வாய் தமிழ் மாதப்பிறப்பு, சிவராத்திரி நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 90479 53116அருகிலுள்ள தலம்: வைத்தியநாத சுவாமி கோயில் 12 கி.மீ., (விஷ காய்ச்சல் தீர)நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணிதொடர்புக்கு: ௦4563 - 261 262