இலக்கியப்பார்வை
இளைய வாசகர்களே! இலக்கிய வாசனையை நுகர ஆரம்பித்து விட்டால், நாவல்களைப் படிப்பது போல் நமது ஆர்வம் மேலிடும். நீங்கள் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் போது, அதற்கு பதிலளிக்கவும் உதவும். நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்த பகுதியில் சுருக்கமாகப் பார்க்கலாம்.தணிகைப்புராணம்முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தணிகை பற்றிய புராணத்தை இயற்றியவர் கச்சியப்ப முனிவர். இவர் திருத்தணியில் சைவ வேளாளர் மரபில் பிறந்தவர். இவரது வித்யாகுரு சிவஞான முனிவர் ஆவார். ஸ்ரீஅம்பலவாண தேசிகரிடம் தீட்சை பெற்றார். திருவானைக்கா புராணம், பூவாளூர் புராணம், பேரூர் புராணம், விநாயகர் புராணம், கச்சி ஆனந்த ருத்திரேசுரர் வண்டுவிடு தூது, பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி, தணிகையாற்றுப் படை, திருத்தணிகை பதிற்றுப்பத்தந்தாதி என்ற நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இதுபோல, காஞ்சிப்புராணம்என்ற நூலின் முதல் காண்டத்தை சிவஞான முனிவரும் இரண்டாவது காண்டத்தை கச்சியப்ப முனிவரும் இயற்றியுள்ளனர்.சைவ எல்லப்ப நாவலர்தொண்டை நாட்டைச் சேர்ந்த சைவ எல்லப்ப நாவலர் அருணாசலப் புராணம், செவ்வந்திப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம், திருவெண்காட்டுப் புராணம், திருச்செங்காட்டங்குடி புராணம் ஆகியவற்றை இயற்றியுள்ளார். இவர் நாவன்மை மிக்கவர் என்பதாலும், சைவத்தின் மேல் பற்றுக்கொண்டவர் என்பதாலும் 'சைவ எல்லப்ப நாவலர்' என்ற பெயர் பெற்றார். பாடுவோர் பற்றி பாடும் நூல்புலவர்கள் இறைவனைப் பற்றி புகழ்ந்து பாடுவார்கள். வள்ளல்களையும், மன்னர்களையும் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட புலவர்களின் புகழை வெளிப்படுத்த புலவர்களைப் பற்றியே பாடும் நூல் 'புலவர் புராணம்'ஆகும். இந்நூலை முருகதாசர் என்னும் தண்டபாணி சுவாமிகள் எழுதியுள்ளார். அருணகிரிநாதர் போல இவர் சந்தங்களுடன் பாடுவதில் வல்லவர். எனவே இவரை 'திருப்புகழ் சுவாமிகள்' என்றும் அழைத்தனர். புலவர் புராணம் 71 இயல்களைக் கொண்டது. 3000 பாடல்கள் உள்ளன. இதில் 70 புலவர்களின் வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. தண்டபாணி சுவாமிகளை 'நமது காலத்து அருணகிரியார்' என வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் புகழ்ந்து போற்றியுள்ளார்.தில்லை திருவாயிரம், ஏழாயிரப் பிரபந்தம், திருச்செந்தூர்க் கோவை, திரு மயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களையும் தண்டபாணி சுவாமிகள் எழுதியுள்ளார்.இலக்கிய ஒருவரி1. தணிகையாற்று படை நூலை எழுதியவர்...கச்சியப்ப முனிவர்2. புலவராற்றுப் படை நூலை இயற்றியவர்...திருமேனி ரத்தினக் கவிராயர்3. நெஞ்சாற்றுப்படை நூலை செதுக்கியவர்...தொழுவூர் வேலாயுத முதலியார்4. இறையனாற்றுப் படை ஆசிரியர்...பின்னத்தூர் நாராயணசாமி அய்யர்.5. தமிழின் முதல் அந்தாதி...அற்புதத் திருவந்தாதி6. அற்புதத்திருவந்தாதியைப் பாடியவர்காரைக்காலம்மையார்7. கந்தர் அந்தாதி எழுதியவர்...அருணகிரிநாதர்8. அபிராமி அந்தாதி ஆசிரியர்....அபிராமி பட்டர்.9. திருக்கருவைப் பதிற்று பத்தந்தாதி நூல் எழுதியவர்...அதிவீரராம பாண்டியன்10. பொன் வண்ணத்து அந்தாதி ஆசிரியர்....சேரமான் பெருமாள் நாயனார்.