நூறாண்டு காலம் வாழ்க
தை அமாவாசை அன்று நிலாவை வரவழைத்து அற்புதம் நிகழ்த்திய அபிராமியும், நுாறாண்டு காலம் வாழச் செய்யும் கால சம்ஹார மூர்த்தியும் நாகை மாவட்டம் திருக்கடையூரில் கோயில் கொண்டுள்ளனர்.பாற்கடலில் கிடைத்த அமுதத்தை தேவர்களுக்கு பரிமாறும் முன்பாக, சிவபூஜை செய்ய மகாவிஷ்ணு விரும்பினார். பார்வதியையும் பூஜைக்கு அழைக்க அவள் தன் ஆபரணங்களை கழற்றி வைத்தாள். அவற்றில் இருந்து அபிராமி என்னும் அம்பிகை தோன்றினாள். அபிராமி என்பதற்கு 'அழகுள்ளவள்' என பொருள். அவளுடன் சேர்ந்து மகாவிஷ்ணு பூஜை செய்தார். அவர்களுக்காக சிவன் அமிர்த குடத்தில் எழுந்தருளினார். இதனால் சுவாமி 'அமிர்தகடேஸ்வரர்' (அமுதகுடத்தில் தோன்றியவர்) என பெயர் பெற்றார். விதியின்படி பதினாறு வயதில் இறப்பு நேரும் என்பதை அறிந்த மார்க்கண்டேயர் இங்கு வந்தார். அவரது உயிரை பறிப்பதற்காக பாசக்கயிறை வீசினான் எமன். உயிர் தப்ப எண்ணிய மார்க்கண்டேயர் சிவலிங்கத்தை கட்டிக் கொண்டார். அதனால் கயிறு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. கோபம் கொண்ட சிவபெருமான் காலால் உதைத்து எமனைக் கொன்றார். எமன் இல்லாததால் பூமியில் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பாரம் தாங்க முடியாமல் போகவே, பூமிதேவி சிவனைச் சரணடைந்தாள். மனம் இரங்கிய சிவன் மீண்டும் எமனுக்கு உயிர் கொடுத்தார். அவரே 'காலசம்ஹார மூர்த்தி' என்னும் பெயரில் இங்கு இருக்கிறார். இவரது அருகில் மார்க்கண்டேயர் வணங்கியபடி உள்ளார். இவரை வழிபட்டால் நுாறாண்டு வாழும் பாக்கியம் கிடைக்கும். ஒருமுறை தஞ்சை மன்னரான சரபோஜி வழிபாட்டிற்காக வந்த போது, சுப்பிரமணியன் என்னும் பட்டரிடம் ''சுவாமி... இன்றைய திதி என்ன?'' எனக் கேட்டார். அவரோ 'பவுர்ணமி' என தவறாக பதிலளித்தார். ''பட்டரே! தை அமாவாசையான இன்று பவுர்ணமி தோன்றாவிட்டால் உம்மை தண்டிப்பேன்'' என எச்சரித்தார்.அம்மன் மீது 'அபிராமி அந்தாதி' என்னும் 100 பாடல்களைப் பட்டர் பாடத் தொடங்கினார். 79வது பாடல் பாடிய போது அம்பிகை தன் காதணியான தாடங்கத்தை வானில் வீசினாள். அதுவே பவுர்ணமி நிலவாக பிரகாசித்தது.திருக்கடையூரில் பூர்ணாபிேஷகம், கனகாபிேஷகம், சதாபிேஷகம், பீமரத சாந்தி, மணிவிழா, ஆயுஷ் ஹோமம் செய்வது சிறப்பு. இதற்காக நாள், நட்சத்திரம் பார்க்காமல் ஆண்கள் தங்களின் பிறந்த நட்சத்திரத்தன்று திருமணம் செய்வது மரபாக உள்ளது. சிவலிங்கத்தின் மீது பாசக்கயிறு பட்ட அடையாளத்தை அபிேஷகம் செய்யும் போது மட்டும் காணலாம். மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள், திருமாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்தி விட்டு, அம்மன் பாதத்தில் வைத்து பூஜித்த புதிய தாலியை அணிகின்றனர். முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தரும் அம்மன் 'குகாம்பிகை' என்ற பெயரில் இருக்கிறாள். பலி பீடத்தின் மீது நான்கு வேதங்களும் நந்தி வடிவில் இங்குள்ளன.செல்வது எப்படி: மயிலாடுதுறை - நாகப்பட்டினம் சாலையில் 26 கி.மீ. விசேஷ நாட்கள்: தை அமாவாசை, மகாசிவராத்திரி, தமிழ் புத்தாண்டு, நவராத்திரிநேரம்: காலை 6:00 - பகல் 1:00 மணி; மாலை 4:00 - இரவு 9:00 மணி தொடர்புக்கு : 04364 - 287 429அருகிலுள்ள தலம்: கவுரிமாயூர நாதர் கோயில் (26 கி.மீ.,)