சொல்லின் செல்வரே அருள்க !
ராமாயண கதாநாயகன், ராமனின் வலது கையான அனுமான் மார்கழி மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். அனுமனுக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளன. அனுமனைச் சிவபெருமானின் அவதாரம் என்றும் கூறுவதுண்டு. வாயுதேவனுக்கும் அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் இவர். இவருக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்று பெயர்கள் உண்டு. ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாமல் வீரனாகத் திகழ்ந்தார். அவர் மிகச் சிறந்த ராமபக்தராகத் திகழ்ந்தார். சீதையை மீட்டுக் கொடுத்ததற்காக ராமபிரானிடம் எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீககுணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்ய முடியாத, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக்கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டுவந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரியசெயல்களைச் செய்தார். அவர் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் தற்பெருமையாகச் சொன்னதேஇல்லை.'' நான் ராமனின் தூதன். அவர் இட்ட பணியை என் தலையால் செய்யக் காத்திருக்கிறேன். எனக்கு ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும்போது, நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன் '' என்று சொன்னவர். ராமனுக்குத் தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் அனுமனால் கிடைத்தது. 'கண்டேன் சீதையை' என்று சொல்லி ராமனுக்கு மகிழ்ச்சியளித்தவர். நல்ல செய்தியை ராமனுக்குச் சொன்னதால் சொல்லின் செல்வன் ஆனவர். இவராலேயே வாலியின் மகன் அங்கதனுக்கு முடிசூட்டப்பட்டது. ராவணனின் அழிவுக்குப்பின், அனுமனால் விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ, ராமனிடம் எதுவும் கேட்கவே இல்லை. சீதை அவனுக்குக் கொடுத்த முத்துமாலையைக்கூட அவன் பரிசாக ஏற்றுக் கொள்ள மறுத்தான். இதைக் கண்டு நெகிழ்ந்த ராமன், ''உனது கடனை எப்படி நான் திரும்பச் செலுத்துவேன். எப்போதும் உனக்கு நான் கடன்பட்டவனாகவே இருப்பேன். என்னைப் போன்றே உன்னையும் மக்கள் போற்றி வழிபடுவர். எனது கோயில் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் உனக்கு சந்நிதி இருக்கும். முதலில் உன்னை வணங்கியபின்னரே, என்னை வழிபாடு செய்யவேண்டும்'' என்றெல்லாம் வரம் தந்து மகிழ்ந்தார். அனுமன் கடலைத் தாண்டியது பற்றி ராமன் ஓரிடத்தில் கேட்கிறான். ''நீ எப்படி கடலைத் தாண்டினாய்?'' என்று. அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, ''எம் பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால்'' என்று பதில் சொன்னார். இதுதான் அனுமனின் பணிவான குணத்திற்கு எடுத்துக்காட்டு. சாதாரணச் செயலை செய்துவிட்டே தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாகக்கூட ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை. இப்படி பலவித பெருமைகள் கொண்ட அனுமனின் பிறந்த நாளில், துளசிதாசரின் அனுமன் சாலிஸா, ராமாயண சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராம ஜெயம் என்று நாள் முழுவதும் ஜெபிப்பதும் நன்மை தரும். வெண்ணெய், உளுந்துவடை பிரசாதமாகப் படைத்து வழிபடவேண்டும். ராமநாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் அனுமன் எழுந்தருளி அருள்புரிவார். அவரை ராமநாமம் சொல்லி வரவேற்போம். அவரது நல்லருள் பெறுவோம்.