பகவான் சத்யா சாய்பாபா - பகுதி 11
அவருக்கு வணக்கம் தெரிவித்த ஈஸ்வரம்மா, ''ஐயா! வகுப்பில் சத்யா நடந்து கொண்ட விதம் குறித்து அறிந்தேன். தாங்கள் அதைப் பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டாம்,' 'என கெஞ்சும் தொனியில் சொன்னார்.கொண்டப்பா அவரிடம்,''அம்மா! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அவன் தெய்வம். நீங்கள் தெய்வத்தாய்,'' என்று சொல்லிவிட்டு பணிவுடன் விடை பெற்றுச் சென்று விட்டார். நாம், ஏதோ சொல்லப்போக ஆசிரியர் இப்படி சொல்லிவிட்டாரே'' என்று ஈஸ்வரம்மாவுக்கு ஆச்சரியம். அதே நேரம் பயமும் ஏற்பட்டது.ஆசிரியர் என்ன தான், தன் மகனைப் பற்றி உயர்த்திச் சொன்னாலும், ஈஸ்வரம்மா வருத்தப்படவே செய்தார். ஒரு ஆசிரியரை, இருக்கையில் இருந்து எழ விடாமல் செய்தது பெரிய தவறு என்றே அவரது மனதிற்குப் பட்டது. மேலும், ஆசிரியரின் கருத்து அவரைக் கலங்கடிக்கவும் செய்தது.'தெய்வப்பிறவி என்ற காரணம் காட்டி, ஆசிரியர்கள் சத்யாவைக் கண்டிக்கத் தவறினால் மகனின் எதிர்காலம் என்னவாகுமோ' என்பது அவரது கவலை. காலப்போக்கில் கஸ்தூரி என்ற ஆசிரியர் பணிக்கு வந்தார்.அவரிடம் தனது கவலையைத் தெரிவித்தார் ஈஸ்வரம்மா. அந்த ஆசிரியர், ''அம்மா! நான் சத்யாவிடம் இதுபற்றி பேசுகிறேன். நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்,'' என்றார். ஒருநாள் பாபாவை அழைத்த அவர், ''சத்யா! நீ தெய்வப்பிறவி என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக ஒரு ஆசிரியரை எழவிடாமல் செய்திருக்கிறாய். அவரை அவமானப்படுத்தி இருக்கிறாய். இதற்கென்ன பதில்,'' என்றார்.''இதற்கு பாபா,''நான் தெய்வப்பிறவி அல்ல. நானே தெய்வம். தெய்வத்தை மனிதன் சோதிக்க முயலும்போது தெய்வம் மனிதனை என்ன செய்யுமோ அதைத்தான் நானும் செய்தேன். என்னை தெய்வம் என்று அடையாளம் காட்ட இதுபோன்ற லீலைகளைச் செய்கிறேன்,'' என்றார். இந்த விளக்கத்தை ஆசிரியர் கஸ்தூரி ஏற்றுக்கொண்டார். அன்று முதல் அவரது சீடராக மாறிவிட்டார். குருவே பாபாவிற்கு சீடராக மாறியது கண்டு பாபாவின் <உறவுப் பிள்ளைகளுக்கு கடுமையான பொறாமை ஏற்பட்டது. அவர்கள் எல்லாருமே பாபாவின் வீட்டில் தான் குடியிருந்தார்கள். அவர்கள் தாத்தா கொண்டமராஜுவின் வம்சாவழியினரின் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பாபாவை அவமானப்படுத்த அவர்கள் திட்டமிட்டனர்.புட்டபர்த்தியிலுள்ள சித்ராவதி ஆற்றைக் கடந்து தான் பாபாவும், அந்தச் சிறுவர்களும் பள்ளிக்குச் செல்வார்கள். ஒருநாள், அவ்வாறு பள்ளிக்குச் செல்லும் வேளையில் அவர்கள் பாபாவை வம்புக்கு இழுத்தனர்.''சத்யா! நீ தான் கடவுளாச்சே! எங்கே எங்களுடன் சண்டைக்கு வா! யார் ஜெயிக்கிறார்கள் என பார்ப்போம்,' 'என்றனர்.பாபாவை அவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு தன் வழியில் சென்றார்.''டேய்! அவன் சரியான பயந்தாங்கொள்ளிடா! அவனாவது, நம்மகிட்டே சண்டைக்கு வர்றதாவது!'' என் கேலி பேசினர். அதையும் பாபா கொண்டு கொள்ளவில்லை.மனிதர்களின் கேலிப்பேச்சுக்கு தெய்வம் உடனடியாக தண்டனை கொடுத்தால், தெய்வத்துக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்! அவர் மவுனமாக நடந்தார்.இந்த மவுனம் அந்த உறவுக்கார சிறுவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது. பாபாவைக் கையைப் பிடித்து இழுத்தனர். வலுக்கட்டாயமாக சண்டை போடச் சொன்னார்கள். அன்பைப் போதிக்க வந்த பாபா, எதையும் கண்டு கொள்ளாமல் நின்றார்.அவர்களது ஆத்திரம் அதிகமாகவே பாபாவை அவர்கள் அடித்து துவைத்தனர். ஆற்றுமணலில் தள்ளி உருட்டினர். அவரது தலையும், ஆடைகளும் கலைந்தன. அடித்தவர்களின் கை வலிக்கவே. அவரை தரதரவென இழுத்துச் சென்று ஒரு முட்புதரில் போட்டுவிட்டனர்.அங்கிருந்து எழுந்து நடந்த பாபா பள்ளிக்குச் சென்றார். அவரது கலைந்த சுருள்கேசமும். அழுக்கடைந்திருந்த ஆடைகளையும் கண்டு சந்தேகப்பட்ட ஆசிரியர்கள் என்ன ஏதென்று அவரிடம் விசாரித்தனர்.அப்போதும் உறவுப்பையன்களைப் பற்றி அவர் ஏதும் புகார் சொல்லவில்லை. ''நன்றாகத் தானே இருக்கிறேன்<,'' என்று சொல்லி ஒருவாறாக ஆசிரியர்களை சமாளித்து விட்டார். ஆசிரியர்களும் அதற்கு மேல் ஏதும் வற்புறுத்திக் கேட்கவில்லை.இங்கே சமாளித்து விட்டாலும், வீட்டில் அம்மா அதைக் கண்டுபிடித்து விட்டார்.''சத்யா! காலையில் புத்தாடை போல் அணிந்து சென்ற நீ, இவ்வளவு அழுக்கடைந்து வரக் காரணம் என்ன?'' என்று கேட்டார்.''அம்மா! எல்லாரும் இன்று காலையில் எல்லாரும் பஜனை பாடினார்கள்,'' என்று சம்பந்தமில்லாமல் பதிலளித்தார் பாபா.தன்னைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் அதனை தனக்குரிய பஜனையாகவே ஏற்றுக்கொள்கிறது தெய்வம். அதைத்தான் பாபா அம்மாவுக்கு பதிலாகச் சொன்னார். தன்னை அடித்தது பற்றி அவர் ஏதும் சொல்லவில்லை.மறுநாள் பள்ளிக்கு விடுமுறை. பாபாவை வீட்டில் காணவில்லை. அவரைத் தேடி அம்மா ஒரு தோப்பு பக்கமாகச் சென்றார். அங்கிருந்து இனிமையான சங்கீதம் கேட்டது. பண்டரிநாதனை வாழ்த்திப் பாடும் பாடல் அது. ஏராளமானோர் இணைந்து அதனைப் பாடிக் கொண்டிருந்தனர். ஈஸ்வரம்மா தோட்டத்திற்குள் சென்றார். பாபா நடுநாயகமாக அமர்ந்து பாட, மற்ற சிறுவர்கள் அவரைத் தொடர்ந்து பாடினர். இந்த இளம்வயதிலேயே இத்தகைய திறமை பெற்றிருந்த மகனைக் கண்டு அவர் பெருமைப்பட்டார். அதே நேரம் தாய்மைக்குரிய கனிவுடன்,''இதனால் தன் மகனுக்கு திருஷ்டியும் ஏற்படுமோ?'' என்று கவலையும் கொண்டார்.நிலைமை இவ்வாறிருக்க பாபாவின் அற்புதச் செயல்கள் பற்றி அன்றைய ஆங்கிலேய அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. ஒரு கிராமத்துச் சிறுவன் பல அற்புதங்களைச் செய்கிறாராமே'' என்று தகவல் கிடைக்கவே, அவரைப் பற்றி அறிய அவர்கள் விருப்பம் கொண்டனர். ஒருநாள், காலையில் ராணுவ உடையணிந்த ஒருவர் புட்டபர்த்தி கிராமத்துக்கு வந்தார். அப்போதெல்லாம் மக்கள் போலீஸ் ஊருக்குள் வந்தாலே என்னவோ ஏதோவென்று பயப்படுவர். வீடுகளுக்குள் ஒளிந்தும் கொள்வார்கள். ராணுவ வீரர் போன்ற தோற்றம் கொண்டவரைக் கண்டு அவர்கள் மறைந்து கொண்டனர். சில பெரியவர்கள் மட்டும் அவரிடம் யார் என்ன ஏதென்று அவரிடம் விசாரித்தனர்.-தொடரும்