உள்ளூர் செய்திகள்

மகானுக்கு பிடித்த மங்கலத்தலம்

காஞ்சிப்பெரியவரை ' நடமாடும் தெய்வம்''  என்றும், அவருடைய கருத்துக்களைத் 'தெய்வத்தின் குரல்'' என்றும் ஆன்மிக அன்பர்கள் கொண்டாடி மகிழ்வர். அப்பெரியவருக்கு மிகவும் பிடித்தமான தலங்களில் ஒன்றாக திருச்சி மாவட்டம் மகேந்திரமங்கலம் சந்திர மவுலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று வருவோர் குருவருளையும், திருவருளையும் ஒருசேர பெற்று வாழ்வில் சிறப்படைவர் என்பது உறுதி. வேதம் படித்த ஊர்: காவிரி ஆற்றின் வடபகுதியில் அமைந்துள்ள மகேந்திர மங்கலம் என்னும் இத்தலம் வரலாற்று சிறப்பு மிக்கது. இங்கு தான் காஞ்சிப்பெரியவர் சிறுவராக இருந்தபோது வேதம் கற்றார். 1908 முதல் 1912 வரை இங்கு தங்கியிருந்தார். இங்குள்ள ஸ்ரீசிங்கம் ஐயங்கார் பாடசாலையில் வேதம் நடத்திய பெரியவர்கள் எல்லாம், ''இந்தக் குழந்தை லோகம் போற்றும் ஜகத்குருவாய் விளங்குவான்,''என்றுஅப்போதே அறிந்து கொண்டு கற்றுத்தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும்  பெரியவர் வேதம் பயின்ற இடம் மிக அழகாகப் பராமரிக்கப்படுவதுடன், மகா பெரியவர் ஜெயந்திவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கும் இங்கும் ஒரே பெயர் தான்: 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலத்தில், சந்திர மவுலீஸ்வரரும், திரிபுரசுந்தரி அம்பாளும் அருள்பாலிக்கின்றனர். காஞ்சிபுரம் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் உலக நன்மைக்காக வழிபாடு செய்யும் சுவாமியின் பெயரும் திரிபுரசுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திரமங்கலத்திலும், காஞ்சிமடத்திலும் மட்டுமே ஒரே  பெயரில் சுவாமியும், அம்மனும் இருப்பது வேறெந்த தலத்திற்கும் இல்லாத சிறப்பம்சமாகும். சந்திர மவுலி என்பது சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான திருநாமம். 'நிலாவினை தலையில் சூடியவர்' என்பது இதன் பொருளாகும்.  ஆதிசங்கரர் பிரதிஷ்டை: காஞ்சிப்பெரியவர் வேதம் பயின்று மடத்தில் பீடாதிபதியான பிறகு, ஜகத்குருவாக விளங்கும்  ஆதிசங்கரரின் திருவுருவத்தை இவ்வூரில் பிரதிஷ்டை செய்தார். காவிரிக்கரையோரம் அமைந்துள்ள இக் கோயிலை ஒட்டி காவிரி நீர் வெள்ளம்போல ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்திற்கு  ''சந்த்யா வந்தன்  கட்டம்'' என்று பெயர். மாலை நேர அனுஷ்டானமான சந்தியாவந்தனம் செய்யும் இடம் என்பதால்  இப்பெயர் உண்டானது. இங்கு தான் சிறுவராக இருந்தபோது, காஞ்சிப்பெரியவர் ஜெபங்களையும், அனுஷ்டானங்களையும் செய்ததாகக் கூறுகின்றனர். இத்தலத்தின் மீது கொண்ட  ஈடுபாட்டால் பீடாதிபதியான பிறகும் கூட தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சாதுர்மாஸ்ய  விரதத்தை பெரியவர் மகேந்திர மங்கலத்தில் மேற்கொண்டார்.  கோயில் திருப்பணி: மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில், பின்னாளில் அந்நியர் படையெடுப்பின் போது  முழுமையாகச் சேதமடைந்து விட்டது. சுவாமியும், அம்மனும் மட்டும் பாதுகாக்கப்பட்டனர். தற்போது, கீற்றுக் கொட்டகையில் அம்மனும் சுவாமியும் வழி படப்பட்டு வருகின்றனர். முறையாக வழிபாடு நடைபெற்று வரும் இக்கோயிலுக்கு புதிதாக ராஜகோபுரமும், ஆலயமும் அமைத்து புனரமைக்கும் திருப்பணி தற்போது நடந்து வருகிறது. காவிரிநதியின் வடபகுதியில் உள்ள கோயில் இது. இத்தகைய அரிய கோயிலைப் பாதுகாக்கும் பணியில் நம் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும்.  இப்பணியில்ஈடுபடுவோர் எம்.எஸ்.சுப்பிரமணிய  ஸ்ரௌதிகள், காஞ்சிகாமகோடி பீடம், என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இருப்பிடம்: திருச்சியில் இருந்து தொட்டியம் சென்று  அங்கிருந்து முசிறி செல்லும்  பாதையில் சென்றால் மகேந்திரமங்கலத்தை அடையலாம்.  போன்: 92821 61971.