மானாமதுரை அழகர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வீர அழகர் கோயில் அமைந்துள்ளது.தல வரலாறு: மாவலி வாணாதிராயர் என்ற மன்னருக்கு வரலாற்றில் ஒரு சிறப்பான இடம் உண்டு. இவருக்கு மதுரை அழகர்கோவில் சுந்தர்ராஜப்பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உண்டு. இந்த பெருமாளை பார்க்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார். இந்நிலையில் ஒரு நாள் மன்னருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அன்று பெருமாளை பார்க்க இயலாததால் மிகுந்த வேதனைப்பட்டார். அன்றிரவில் கனவில் தோன்றிய பெருமாள், ''மன்னா, வைகை ஆற்றின் கிழக்கு கரையில் எனக்கு ஒரு கோயில் கட்டி அதில் என்னை பிரதிஷ்டை செய். உன்னருகிலேயே நான் இருப்பேன். ஒரு எலுமிச்சம்பழத்தை ஆற்றில் விட, அதன் ஒரு பகுதி எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு கோயிலையும், மறுபாதி விழும் இடத்தில் கோயிலுக்கான குளத்தையும் வெட்டு,'' என்று ஆணையிட்டு மறைந்தார். எனவே தான் கோயிலிலிருந்து குளம் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதை அலங்கார தீர்த்தம் என்பர்.கோயில் அமைப்பு: மூலவர் சுந்தர்ராஜப்பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி சமேதராய் அருள்பாலிக்கிறார். தாயார் சவுந்தரவல்லி என்ற மகாலட்சுமிக்கும் சன்னதி உண்டு. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.தல சிறப்பு: ஆடித்திருவிழாவின் போது காஞ்சி வரதராஜப்பெருமாள் போல பெருமாள், தாயாரின் இருப்பிடத்திற்குச்சென்று திருமணம் முடித்துக் கொள்வார். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெளிநாட்டு பக்தர்கள் அதிகம். மறுபடியும் ஒரு ராவணன் தோன்றி விடக்கூடாது என்பதற்காக இவர் தெற்கு முகமாக அருள்பாலிக்கிறார். திருமணத்தடைநீங்க வியாழக்கிழமை வெற்றிலை மாலையும், செயல்தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மாலையும் இவருக்கு சாத்தலாம். வறுமையை விரட்ட மகாலட்சுமிக்கு வெள்ளிகிழமைகளில் தாமரைத்திரி விளக்கு ஏற்றுகின்றனர்.ஊர் பெயர்க்காரணம்: சீதையை தேடி வானர வீரர்கள் இங்கு வந்தனர். பிருந்தாவன் என்ற இடத்திலிருந்த மரத்தின் சுவை மிக்க கனிகளை உண்டதால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. ராமர் அவர்களுக்கு மயக்கம் தெளிவித்து ஊக்கப்படுத்தினார். எனவே இவ்வூருக்கு 'வானரவீர மதுரை' என பெயர் வந்து, பின் மருவி 'மானாமதுரை' ஆனது.திருவிழா: சித்திரையில் 10 நாள் திருவிழா. 4ம் நாள் எதிர்சேவையும், 5ம் நாள் அழகர் ஆற்றில் இறங்கும் விழா, ஆடிப்பவுர்ணமியில் பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசி.இருப்பிடம்: மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் 46கி.மீ.