உள்ளூர் செய்திகள்

மனசு சரியில்லையா? திங்களன்று இங்கே வாங்க!

''மனசே சரியில்லே...எவ்வளவு தான் மாற்ற முயன்றாலும், அந்த சம்பவத்தை மறக்கவே முடியலே...'' என்று நடந்த விரும்பத்தகாத சம்பவங்களால் மனம் வருந்துகிறீர்களா! திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் ஒத்தாண்டேஸ்வரர் கோயிலுக்கு வந்தால் விடிவு காலம் பிறந்திடும். சோழமன்னரான கரிகால் பெருவளத்தான், இக்கோயில் உள்ள பகுதிக்கு யானையில் வந்து கொண்டிருந்தார். வழியில் புதர் ஒன்றில் யானையின் கால் சிக்கவே வாளால் செடி, கொடிகளை மன்னர் வெட்டினார். அப்போது அங்கு ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியுற்ற மன்னர் புதரை விலக்கிய போது சிவலிங்கம் தென்பட்டது. பதறிய மன்னர் சிவலிங்கத்தை வெட்டிய பாவம் தீர தன் வலது கையை வெட்டிக் கொண்டார். அவரது செயல் கண்டு நெகிழ்ந்த சிவன் காளை வாகனத்தில் காட்சி தந்து கையை மீண்டும் வளரச் செய்தார். இங்கு மூலவராக 'ஒத்தாண்டேஸ்வரர்' என்னும் பெயரில் சிவனும், 'குளிர்ந்த நாயகி' என்னும் பெயரில் அம்மனும் உள்ளனர். சிவலிங்கத்தின் தலையில் வெட்டுப்பட்ட அடையாளம் உள்ளது. கருவறையில் லிங்கத்தின் பின்புறம் அம்மனுடன், சிவன் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். மனபலம் தருபவர் என்பதால் 'மன அனுகூலேஸ்வரர்' என்றும் இவருக்குப் பெயருண்டு. சந்திரனுக்குரிய திங்கட்கிழமை, பவுர்ணமி நாட்களில் வில்வ இலையால் அர்ச்சனை செய்ய விரும்பத்தகாத சம்பவங்களால் ஏற்பட்ட வருத்தம் நீங்கும். இங்குள்ள நடராஜர், சிவகாமி ஒருவரை ஒருவர் பார்த்தபடி உள்ளனர். இவர்களை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர். தடைகளை நீக்கி முயற்சியில் வெற்றி தரும் 'பிரசன்ன விநாயகர்' இங்குள்ளார். 'பிரசன்ன' என்றால் 'அனுகூலம்' என்பது பொருள். கஜபிருஷ்ட விமானத்தில் கீழ் மேற்கு நோக்கியபடி பெருமாள் சன்னதி உள்ளது. பிரகாரத்தில் சனீஸ்வரர், ரிஷப நாயகர் உள்ளனர். சுவாமிக்கு முன்புறம் அதிகார நந்தி, பிரதோஷ நந்தியும் பின்புறத்தில் தர்ம நந்தியும் உள்ளன, தல விருட்சம் வில்வ மரம்.எப்படி செல்வது: சென்னை - திருப்பதி ரோட்டில் 25 கி.மீ., விசேஷ நாள்: வைகாசி விசாகம், ஐப்பசி அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:30 - 8:00 மணிதொடர்புக்கு: 98415 57775அருகிலுள்ள தலம்: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் (20 கி.மீ.,)நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 044 - 2766 0378