நினைத்ததை நிறைவேற்றும் புரட்டாசி சனி பிரார்த்தனை!
புரட்டாசி கடைசி சனியான இன்று பெருமாள் முன் அமர்ந்து இதைச் சொன்னால் செல்வ வளம் பெருகும். நினைத்தது நடக்கும்.* மகாவிஷ்ணுவே! எல்லைகளுக்கு அப்பாற்பட்டவனே! கிருஷ்ணனே! வேதத்தால் போற்றப்படும் உயர்வான வடிவம் கொண்டவனே! கோபியர் மனங்களில் இருப்பவனே! என் துன்பம் நீங்க உன்னை பக்தியோடு வணங்குகிறேன்.* மும்மூர்த்திகளில் உயர்ந்து திகழும் சர்வேஸ்வரனே! கருமை நிறத்தவனே! மந்திர சாஸ்திரங்களில் நிறைந்திருப்பவனே! ஆதிசங்கரரால் போற்றப்பட்டவனே! உன் திருப்பாதங்களைப் போற்றுகிறேன்.* தேவாதி தேவனே! எல்லாருக்கும் உயிராக விளங்கும் திருமாலே! உலகிலுள்ள நியாயமான இன்பங்களை எனக்கு அருள்வாயாக.* எங்கும் நிறைந்த பரம்பொருளே! உடலாலும், உள்ளத்தாலும் இப்பூமியில் நான் செய்யும் செயல்களின் பலனை உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். அதற்குரிய பலனை அருள்வாயாக.* தேவாதிதேவா! உலகிலுள்ள நல்லவர்களின் தொடர்பு எனக்கு எப்போதும் கிடைக்கட்டும். அவர்களுடைய நல்வார்த்தையால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும்.* ஜகந்நாதா! பஞ்சபூதம், பிரபஞ்சம், பறவை, மீன், விலங்கு, நண்பர், எதிரி, அனைவரையும் உன்னுடைய உருவமாகவே உள்ளத்தில் நினைக்கும் பக்குவத்தை எனக்கு கொடுப்பாயாக.* கம்சனை வதம் செய்தவனே! பெற்றோருக்கு மதிப்பளித்தவனே! வேண்டியவற்றை அன்பர்களுக்கு வழங்கி இன்பமடைய செய்பவனே! அடியேனுடைய சகல பிணிகளையும் போக்கி அருள் செய்வாயாக. * பத்மநாபா! என் நாட்டுக்கு பசி, தாகம் இல்லாத வகையில் நிறைந்த தானிய உற்பத்தி, போதிய மழை, தொழில் வளம் கிடைக்க அருள் செய்வாயாக.