உள்ளூர் செய்திகள்

புத்தூர் சுப்பிரமணியர்

மார்ச் 26 பங்குனி உத்திரம்முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்தது பங்குனி உத்திர நன்னாளில்! அவ்வகையில், முருகத்தலங்களில் இது முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த இனியநாளில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள புத்தூர் கோயிலில் அருளும் சுப்பிரமணியரை தரிசிப்போம்.தல வரலாறு:நாகாசுரன் என்ற கொள்ளையன் மக்களை துன்புறுத்தி வந்தான். இப்பகுதியை ஆண்ட மன்னரால், அவனை அழிக்க முடியவில்லை. முருக பக்தரான அம்மன்னர், அவனை அழிக்கும்படி முருகனிடம் முறையிட்டார். ஒருமுறை நாகாசுரன் மக்களின் உடைமைகளை சூறையாடினான். அப்போது, முருகப்பெருமான் ஒரு இளைஞனின் வடிவில் காலணி மற்றும் வீரதண்டை அணிந்து, வாள்மற்றும் கத்தியுடன் அங்கு வந்தார். நாகாசுரனை மறித்த முருகன், ''அடேய்! நீ செய்வது தவறு. எனவே, செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிடு,'' என எச்சரித்தார். முருகப்பெருமான் யாரையும் அவ்வளவு எளிதில் அழிக்கமாட்டார். அவர் கருணைக்கடல். பத்மாசுரனுக்கு கூட அவர் ஞானம் கொடுத்து மயிலாகவும், சேவலாகவும் ஆட்கொள்ளவே செய்தார். அவ்வகையில், நாகாசுரனுக்கும் எச்சரிக்கையே விடுத்தார். ஆனால், விதி யாரை விட்டது? யாராலும் எதிர்க்க முடியாத தன்னை, ஒரு இளைஞன் துணிச்சலுடன் வந்து எதிர்த்ததால் அவமானமடைந்த நாகாசுரன், அவரைத் தாக்க முயன்றான். முருகன் அவனை வீழ்த்தினார். மக்கள் தங்களைக் காத்த இளைஞனை மன்னரிடத்தில் கூட்டிச் சென்ற போது, அவன் மறைந்து விட்டான்.தான் வணங்கிய முருகப்பெருமானே இளைஞனாக வந்து, நாகாசுரனை அழித்தார் என்பதை உணர்ந்த மன்னர், இவ்விடத்தில் அவருக்கு கோயில் கட்டினார். இளைஞனாக வந்ததால், 'குமரன்' என்றும், தலத்திற்கு 'குமார கோயில்' என்றும் பெயர் ஏற்பட்டது. இப்பகுதியில் பாம்பு புற்றுகள் நிறைந்திருந்ததால் பிற்காலத்தில் 'புத்தூர்' என்ற பெயர் ஏற்பட்டது. காலணியுடன் மூலவர்:மூலவர் சுப்பிரமணியர் இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்திருக்கிறார். இத்தகைய கோலத்தில் முருகனைத் தரிசிப்பது அபூர்வம். முதலில் இவர் உக்கிரமாக இருந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இவரது உக்கிரத்தைக் குறைப்பதற்காக இவருடன் வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்தனர். அப்போது சுவாமியின் கையில் இருந்த வில்லுக்கு பதிலாக வேலை பிரதிஷ்டை செய்தனர். தைப்பூசத்தன்று இவருக்கு விசேஷ மகாபிஷேகம் நடக்கும். பயந்த சுபாவம், மனக்குழப்பம் உள்ளவர்கள் இத்தலத்து முருகனை வழிபட வருகிறார்கள். அகத்திய லிங்கம்:இக்கோயிலில் தாணுமாலய லிங்கம் இருக்கிறது. ஆவுடையார் (பீடம்) இல்லாமல் பாணம் மட்டுமே இருக்கும் இந்த லிங்கத்திற்குள், சிவன், திருமால், பிரம்மா ஆகிய மூவருமே ஐக்கியமாகியிருப்பதாக ஐதீகம். அகத்தியருக்காக மும்மூர்த்திகளும் இவ்வாறு காட்சி தந்தனர். இதனால், 'அகத்திய லிங்கம்' என்றும் இதற்கு பெயருண்டு. கோயில் வளாகத்திலுள்ள இலுப்பை மரத்தின் கீழ், காவல் தெய்வம் முனீஸ்வரன் அரூபமாக (உருவமின்றி) அருளுகிறார். பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, இரட்டை விநாயகர், துர்க்கை, நவக்கிரகங்கள், சனீஸ்வரர் நாகர் சந்நிதிகள் உள்ளன. இருப்பிடம்:மதுரையில் இருந்து 36 கி.மீ., தூரத்தில் உசிலம்பட்டி. இங்கிருந்து வேப்பனூத்து பஸ்களில் 2 கி.மீ., தூரத்திலுள்ள விளாம்பட்டியில் இறங்க வேண்டும்.திறக்கும் நேரம்: காலை 6 - 11, மாலை 5 - 7.போன்: 04552 - 251 428, 98421 51428.