ராமாயணக் கோயில்
தேனி மாவட்டம் கூடலுாரில் கோயில் கொண்டிருக்கும் கூடல் அழகிய பெருமாள் புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட வாகனத்தில் காட்சி தருகிறார். இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர் ஒருவர் பெருமாள் பக்தராக இருந்தார். அவரது கனவில் குறிப்பிட்ட இடத்தைக் காட்டிய பெருமாள் கோயில் கட்டும்படி உத்தரவிட்டார். அதன்படி மன்னரும் கோயில் எழுப்ப சுவாமிக்கு 'கூடல் அழகிய பெருமாள்' என்றும், ஊருக்கு 'கூடலுார்' என்றும் பிற்காலத்தில் பெயர் ஏற்பட்டது. 'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தின் அம்சமாக அமைக்கப்படுவது அஷ்டாங்க விமானம். 108 திவ்யதேசங்களில் மதுரை கூடலழகர், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோயில்களில் இது உள்ளது. இதே அமைப்பில் இங்கும் விமானம் உள்ளது. முன் மண்டபத்தில் ராமாயண நிகழ்ச்சிகள் சிற்பங்களாக உள்ளன. அயோத்தியில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தல், ராம சகோதரர்கள் பிறப்பு, சீதா கல்யாணம், ராவண வதம், பட்டாபிஷேகம் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த விமானத்தை, 'ராமாயண விமானம்' என்றும், கோயிலை 'ராமாயணக் கோயில்' என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள பாண்டிய, சேர மன்னர்களின் சின்னமான மீன், வில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் காட்சி தருகிறார். வெள்ளிக்கிழமைகளில் வாசனை திரவியம், நல்லெண்ணெய் சேர்த்த கலவையால் காப்பிடுகின்றனர். மூலவர் கூடலழகர் என்றும், உற்ஸவர் சுந்தரராஜர் என்றும் அழைக்கப்படுகிறார். பிரிந்த தம்பதியர் சேர பெருமாளுக்கு துளசி மாலையும், தலைமை பொறுப்பு, உயர் பதவி கிடைக்க வஸ்திரமும் அணிவிக்கின்றனர். நவநீத கிருஷ்ணர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார். ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. சுற்றுச்சுவரில் தசாவதார சிற்பங்கள் உள்ளன. சித்ரா பவுர்ணமியன்று வீதியுலா புறப்பட்டு மறுநாள் கோயிலுக்கு திரும்புகிறார் பெருமாள்.எப்படி செல்வது: தேனி - குமுளி சாலையில் 45 கி.மீ.,விசேஷ நாள்: சித்ரா பவுர்ணமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசிநேரம்: காலை 10:30 - 12:00 மணி; மாலை 5:30 - 7:30 மணிதொடர்புக்கு: 04554 - 230 852அருகிலுள்ள தலம்: சுருளி பூதநாராயணர் கோயில் 10 கி.மீ.,