உள்ளூர் செய்திகள்

வெற்றி நாயகனுக்கு நமஸ்காரம்

* அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக ஜீவன்கள், தங்கள் செயல்களை செய்யும்படியான பலத்தை கொடுக்கிறாய். எவ்வித எதிர்பார்ப்புமின்றி உலகிற்கு ஒளி கொடுப்பதற்காக ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.* தங்க நிறமானவனே நீ! அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ணமயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலைப் படைக்கிறாய்.* கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே! 'சப்த' என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்கிறவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நீயே அழிக்கிறாய். அழித்த பிறகு மீண்டும் அவற்றை படைப்பதற்காக பிரகாசம் மாறாமல் அப்படியே இருக்கிறாய்.* கதிரவனே! நீ எல்லோராலும் கொண்டாடப்படுகிறாய். அக்னியை உனக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறாய். மாலை வேளையில் மறைந்து போகிறாய். பனியை அழிக்கிறாய். ஆகாயத்திற்கு நீயே நாதன், ராகு என்னும் இருளைப்பிளந்து கொண்டு வெளியில் வரும் படியான சக்தியைக் கொண்டிருக்கிறாய்.* ரிக், யஜூர், ஸாமம் என்ற வேதங்களின் முடிவைக் கண்டவனே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன், தட்சிணாயன காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.* வட்ட வடிவம் உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயகாலத்தில் மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா வஸ்துகளையும் தகிக்கச் செய்கிறவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே! மகத்தான ஒளியை உடையவனே! எல்லா பிராணிகளிடமும் அன்பு கொண்டவனே! அந்தப் பிராணிகளை அழிக்கவும் செய்பவனே! உனக்கு நமஸ்காரம்.* நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே! பிரபஞ்சத்தை நிலைபெறச் செய்கிறவனே! எல்லா தேவதைகளைக் காட்டிலும் அதிகமான சக்தியை உடையவனே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா, அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற மூர்த்திகளை உள்ளடக் கியவனே! உனக்கு நமஸ்காரம்.* கண் கண்ட தெய் வமே! உத்ய பர்வதமலையில் உதிக்கும் உனக்கு நமஸ்காரம். மேற்கு மலையில் அஸ்தமிக்கும் உனக்கு நமஸ்காரம். நட்சத்திர மண்டலங்களுக்கும், கிழமைகளுக்கும் அதிபதியாய் இருக்கும் உனக்கு நமஸ்காரம்.* வணங்குவோருக்கு வெற்றியையும், ÷க்ஷமத்தையும் கொடுப்பவனே! குதிரைகளால் இழுக்கப்படும் தேரை உடையவனே! இருட்டை நாசம் செய்பவனே! வணங்குவோரின் எதிரிகளை அழிப்பவனே! பரந்த உலகத்தின் நாயகனே! நன்றியற்றவர்களை கொல்பவனே! உனக்கு நமஸ்காரம்.* உருகியோடும் தங்க ஆறு போன்ற ஒளியைக் கொண்டவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருளை போக்குகிறவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கு சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.