கீதை நாயகனை வாழ்த்துவோம் (12)
இன்றைய உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. எதை நோக்கி என்பது யாருக்கும் தெரியவில்லை. இளமையை தொலைத்து பணத்தை தேடுகிறோம். ஆனால் முதுமையில் ஆரோக்கியம், அமைதியை பணத்தால் வாங்க நினைக்கிறோம். முடியுமா?எங்கும் அவசரம். எதிலும் அவசரம். நின்று நிதானமாக குளிப்பதோ, பல் தேய்ப்பதோ கூட கிடையாது. விடுமுறை நாளில் ஓய்வு எடுப்பதாக எண்ணி துாங்கி கழிக்கிறோம். ஆற, அமர உணவை ருசிக்க மறந்தோம். மின் விசிறி, ஏ.சி.,யை நம்பி இயற்கையை விட்டு விலகினோம். தென்றல் மேனியைத் தழுவும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல் வாழ்வைக் கழிக்கிறோம். இல்லை இழக்கிறோம்.எப்படி வாழ வேண்டும் என்பதை 'கண்ணன் - என் தோழன்' என்னும் பாட்டில் மகாகவி பாரதியார் விளக்குகிறார்.கண்ணன் எப்படி வாழ்கிறான் என்பதை சொல்கிறார் பாருங்கள். இசையை ரசிப்பதில் வல்லவன் அவன். மனதை வருடும் மெல்லிசை, கண்களை மூடிக் கேட்டால் நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்லும். அதை எப்போது நம்மால் ரசிக்க முடியும்? அமைதியாக ஓரிடத்தில் மனம் நின்றால் மட்டுமே இசையை ரசிக்க முடியும். பாடல் நம்மை மயக்க வேண்டும் என்கிறார் பாரதியார். கர்நாடக இசையோ, ராகங்களோ தெரிய வேண்டும் என்பதில்லை. இசையை அமைதியாக உள் வாங்க பொறுமை போதும். இசையால் நோய் கூடத் தீரும் என அறிவியல் நிரூபித்துள்ளது. காரணம் அமைதியை ஏற்படுத்தி, மனதை இன்பத்தில் திளைக்கச் செய்தால் நோய் தீர்வது இயல்பு தானே. இசை போல ஒவியத்தை ரசிப்பதும் கலை. ஓவியத்தைப் பார்க்கும் போதே அதிலுள்ள உயிரோட்டத்தை காண வேண்டும். அதற்கு கண்ணிலே காதல் வேண்டும். 'கண்ணிலே அன்பிருந்தால்...கல்லிலே தெய்வம் வரும்' என்பார் கண்ணதாசன். நம் மனத்தில் எழும் அன்பு, கண்கள் வழியாகப் பாயும் போது, கல்லில் உள்ள தெய்வம் பேசத் தொடங்கும். அன்பும், பொறுமையும் இருந்தால் இசையை ரசிப்பதும், ஓவியத்தைக் காதலிப்பதும் சுலபமே. இசை, ஓவியக்கலை தெரிந்தால் தியானம் செய்ய தேவையில்லை என்கிறார் பகவான் ராமகிருஷ்ணர். காரணம் இவை மனதை ஒருநிலைப்படுத்தும். ஆனால் இவற்றை ரசிப்பதற்கு மனத்துாய்மை வேண்டும். 'தான்' என்னும் அகங்காரம் இருந்தால் கலைகளை ரசிக்க முடியாது. 'இவன் என்ன பாடுகிறான்? இவன் என்ன வரைந்து கிழித்தான்? என்ற சிந்தனை வந்தால் எதையும் அனுபவிக்க முடியாது. பகவான் ரமணர் சீடர்களுடன் கிரிவலம் வந்த போது இறந்த நாய் அழுகிய நிலையில் கிடந்தது. உடன் வந்தவர்கள் மூக்கைப் பிடித்தபடி இகழ்ந்து பேச, ரமணர் மட்டும் “இந்த நாயின் பற்களைப் பார்த்தாயா? எவ்வளவு வெண்மையாக உள்ளது'' என பாராட்டினார். தீமைக்குள் நல்லவற்றைக் காணும் உயர்ந்த குணம் பகவானிடம் இருந்தது. ரசிப்பதற்கு இத்தகைய குணம் வேண்டும் என்பதை யார் மறுக்க இயலும்? வெள்ளைத் துணியில் உள்ள சிறு கரும்புள்ளியைக் காட்டினால் பரந்து கிடக்கும் வெண்மையை விடவும் கருப்புப் புள்ளியே நம் கண்ணுக்குத் தெரிகிறது. கண்ணன் இசையை ரசிக்கவும், ஓவியத்தை அனுபவிக்கவும் மட்டும் தெரிந்தவன் இல்லை. பகை என வந்து விட்டால் எதிரியுடன் மோதிச் சண்டையிட்டு வெல்லும் திறமை கொண்டவன். மலர் போன்ற மென்மையுடன் இருப்பவன். வில்லின் கணை போல் கடினமாக மாறி போர் புரியவும் தயங்க மாட்டான். இது தான் கர்மயோகியின் இயல்பு. உன் கைகள் எங்கே கண்ணீரைத் துடைக்க வேண்டுமோ அங்கே மென்மையாகவும், எங்கே எதிரிகளை ஒடுக்க வேண்டுமோ அங்கே வலிமையாகவும் இருக்க வேண்டும் என்பதே கண்ணன் சொன்ன வாழ்வியல் பாடம். இதை பகவத் கீதையாக அர்ஜூனனுக்கு உபதேசித்தான். கவுரவர்களுடன் போர் என்று வந்த பிறகு, 'போர் செய். அதுவே இப்போதைக்கு உனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமை' என அறிவுரை சொன்னான். சனாதன தர்மம் என்னும் இந்து மதம் வெறும் வழிபாட்டை மட்டும் சொல்லவில்லை. மனிதன் வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்பதை சொல்கிறது. இசையை காதலிக்கவும், ஓவியத்தை ரசிக்கவும், போர்க்கலை பயிலவும் கற்றுத் தருகிறது. வாழும் முறையைக் கற்றுத் தரும் கண்ணனை 'கடவுள்' என வேதம் கற்ற முனிவர்கள் துதிக்கின்றனர். இந்த வாழ்வியல் கீதையை அர்ஜூனனுக்கு மட்டும் அவன் சொல்லவில்லை. எனக்கும் சொன்னான். அவன் பெருமைகளை வாழ்த்தி மகிழ்வேன் என்கிறார் பாரதியார். அவரோடு நாமும் கண்ணனை வாழ்த்துவோம். காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண் மகிழ் சித்திரத்தில் -பகைமோதும் படைத்தொழில் யாவினுமே திறமுற்றிய பண்டிதன் காண் உயர்வேதமுணர்ந்த முனிவர் உணர்வினில்மேவு பரம்பொருள் காண் நல்லகீதை உரைத்தெனை யின்புறச் செய்தவன்கீர்த்திகள் வாழ்த்திடுவேன்.தொடரும்அலைபேசி: 94869 65655'இலக்கியமேகம்' என்.ஸ்ரீநிவாஸன்