உள்ளூர் செய்திகள்

சனாதன தர்மம் - 5

உயிர்களை ஆதரிக்க வேணுமடி பாப்பாபாரதப் போர் நடைபெறும் நேரம். உலகைக் காக்கும் எம்பெருமான் கிருஷ்ணர், தர்மத்தைக் காக்க தானே தேரோட்டியாக வந்தான். ஒருநாள் போர் முடிந்து அர்ஜுனனும் சகோதரர்களும் ஓய்வறையில் இருந்த போது கிருஷ்ணரைக் காணவில்லையே எனத் தேடினர். அவர் குதிரை லாயத்தில் இருப்பதாக தகவல் வர அங்கு ஓடினர். பகவான் குதிரைகளைக் குளிப்பாட்டி விட்டு உணவளித்துக் கொண்டிருந்தான். பாண்டவர்கள் திகைத்தனர். ஏன் இப்படி? இந்த வேலையை நீதான் செய்ய வேண்டுமா... எத்தனை வேலையாட்கள் இருக்கிறார்கள்? எனக் கேட்டனர்.பகவான் சிரித்தபடி, 'குதிரைகள் போர்க்களத்தில் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல. அவை ஒவ்வொன்றையும் நான் காதலிக்கிறேன். குதிரைகளை குளிப்பாட்டுவது, மணலில் புரட்டி தினவு தீரச் செய்வது, உணவளிப்பது, போரில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடுவது, பாசமுடன் பிடரியைப் தடவுவது என என் பணிகளை பார்த்துப் பார்த்துச் செய்கிறேன். என் ஒவ்வொரு சொல்லும் அவற்றுக்குப் புரியும். அவற்றின் ஒவ்வொரு கனைப்பிற்கும் எனக்கு அர்த்தம் புரியும். இதனால் தான் நான் இடும் கட்டளைக்கு செவி சாய்த்து நடக்கின்றன. பாண்டவர்கள் மட்டுமல்ல நாமும் பகவானின் விளக்கம் கேட்டு வியக்கிறோம். இதனை பகவான் பகவத்கீதையில் மூவுலகிலும் எனக்கு ஆற்ற வேண்டிய செயல் ஏதுமில்லையென்றாலும் ஒவ்வொரு நிமிடமும் செயலாற்றுகிறேன்' என்கிறார்.'பசுக்களைப் பாதுகாப்பாயாக அவற்றை துன்புறுத்தாதே. வெள்ளாட்டையோ செம்மறி ஆட்டையோ துன்புறுத்தாதே. இருகால்கள் உள்ள எவற்றையும் இம்சிக்காதே. குதிரைகளையும், கழுதைகளையும் அன்போடு நடத்து. எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதே' என்கிறது யஜுர்வேதம். எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனத்தால் எண்ணி உண்டாகின்ற செயல்களைச் செய்யாதிருத்தலே நன்று என்பது பொது மறையாகிய வள்ளுவம். பெரிய புராணம் இவ்வாறு தான் தொடங்குகின்றது. மனுநீதிச் சோழன் வரலாறு. மக்கள் குறை போக்க அரண்மனை வாசலில் பெரிய மணியைக் கட்டி இருந்தான். ஒருநாள் பசு ஒன்று மணியை அடித்தது. அதன் குறையைத் தீர்க்க அதன் பின்தொடர்ந்தான் மன்னன். ராஜ வீதியில் இளவரசன் ஓட்டி வந்த ரதத்தில் பசுவின் கன்றுக்குட்டி பாய்ந்து இறந்து கிடந்தது. அதைக் காட்டவே மன்னனை அழைத்து வந்தது புரிந்தது. பசுவின் துயர் தீர்க்க எண்ணினான். அங்கே அமைச்சர்கள் ஓடி வந்தனர். மன்னா... தவறு கன்றின் மீது தான் உள்ளது. முன் சக்கரத்தில் விழுந்திருந்தால் இளவரசர் தேரை நிறுத்தியிருக்கலாம். பின் சக்கரத்தில் விழுந்துள்ளது. அதை இளவரசர் கவனிக்க முடியாதல்லவா...யார் வந்தாலும் விபத்தை தவிர்க்க முடியாது என்றனர். மன்னன் எதையும் காதில் வாங்கவில்லை. மகனை அழைத்தான். தேர்ச்சக்கரத்தில் படுக்க வைத்தான். அமைச்சர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்பதாக இல்லை. 'எல்லா உயிர்களையும் ஆதரித்து காப்பாற்றுவது மன்னனின் கடமை. இப்போது எனக்கு நானே தீர்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்' என்று தானே தேரைச் செலுத்தி மகன் மீது ஏற்றினான். கண்டவர்கள் எல்லாம் கண்ணீர் விட்டனர். நீதி தவறான மன்னனின் செயலைக் கண்ட தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். சிவபெருமானே நேரில் தோன்றி இறந்த இளவரசனையும், கன்றுக்குட்டியையும் உயிருடன் வர அருள்புரிந்தார். இன்றும் கிராமங்களில் ஆடு, மாடுகளைத் தங்கள் வீட்டு உறுப்பினராக கருதி அன்பு செலுத்தக் காணலாம். கிருஷ்ணர் கீதையில் கூறியபடி கல்வியும், பணிவும் உள்ள அந்தணர், பசு, யானை, நாய், இழிந்த குணம் உடையவர்கள் என அனைவரிடமும் ஒரே மாதிரியான பார்வை கொண்டவர்களாக இருப்பவரே உயர்ந்தவர்கள் என்பதை விளக்குவதே நம் மரபாகும். உயிர்கள் அனைத்தையும் நேசிப்பதே சனாதன தர்மத்தின் வேர்.-தொடரும்இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்93617 89870