வெற்றி தரும் செந்தூர் முருகன்
ஆறுபடையின் பெயர்க்காரணம்தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி படைகளுடன் தங்குமிடம் 'படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரனை வதம் செய்ய முருகன் படையுடன் தங்கிய தலம் திருச்செந்துார் மட்டுமே. ஆனால், மற்ற தலங்களையும் சேர்த்து 'ஆறுபடை வீடு' என்கிறோம்.வறுமையில் வாடுவோரிடம் வள்ளல் இருக்குமிடத்தை சொல்லி வழிகாட்டுவது அக்கால வழக்கம். அந்த வகையில் அமைந்த நுால்களை 'ஆற்றுப்படை' என்பர். இவ்வாறு பக்தர்களின் குறைகளைப் போக்கும் வள்ளலான முருகன் ஆறு தலங்களில் அருள்புரிகிறார் என சங்கப்புலவர் நக்கீரர் நுால் இயற்றினார். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நுால் என்பதால் இது, 'திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, 'ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.வெற்றிக்களிப்பில் முருகன்திருச்செந்துாரில் கந்தசஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருள்வார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்கு பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருள்வார். ஆறாம் நாளன்று கடற்கரையில் சூரனை வதம் செய்வார். அதன்பின் வெற்றிக்களிப்பில் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.புராணங்களில் கந்தசஷ்டி ஒருசமயம் முனிவர்கள் சிலர் உலக நன்மைக்காக யாகம் நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை தொடங்கி ஆறு நாள் நடத்தினர். யாகத்தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதம் ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஒன்றாக்கிட முருகன் அவதரித்தார். இந்நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது. தேவர்கள் வலிமை பெறவும், முருகன் அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து விரதமிருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்புரிந்தார். இதனடிப்படையில் சஷ்டி கொண்டாடப்படுவதாக கந்த புராணம் சொல்கிறது.தெய்வானை திருக்கல்யாணம்முருகன் போரில் வெற்றி பெற்றதற்காக இந்திரன் தன் மகள் தெய்வானையை திருமணம் செய்து வைத்த தோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படை வீடான திருப்பரங் குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்துாரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக் கல்யாணம் நடக்கும். இதற்கு முன்னதாக தெய் வானை தபசு மண்டபம் சென்று முருகனை மணம் புரிய வேண்டி தவமிருக்கும் வைபவம், நிச்சயதார்த்த வைபவம் நடக்கும். நள்ளிரவில் திருக்கல்யாணம் நடக்கும். பஞ்சலிங்க தரிசனம்முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் கருவறையில் இருக்கிறார். சிவயோகி போல தலையில் ஜடா மகுடம் தரித்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள சிவலிங்கத்திற்கு காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாரா தனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவை இரண்டையும் தீபாராதனை ஒளியில் மட்டுமே தரிசிக்க முடியும். இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறம் 'பஞ்சலிங்க' சன்னதி உள்ளது. மார்கழி மாதத்தில் தேவர்கள் பஞ்சலிங்கத்தை தரிசிக்க வருவதாக ஐதீகம்.மாப்பிள்ளை சுவாமிகோயில்களில் ஒரு தெய்வத்துக்கு ஒரு உற்ஸவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால் திருச்செந்துார் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்ஸவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதியும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை 'மாப்பிள்ளை சுவாமி' என அழைக்கின்றனர்.இரண்டாம் வீடு திருச்செந்துார்முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில் நடந்தது. எனவே கந்தசஷ்டி விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.12நாள் சஷ்டி விழாமுருகத்தலங்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாள் நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாள் நடத்துவர். ஆனால் திருச்செந்துாரில் முதல் ஆறுநாள் வரை விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாள் கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என 12 நாட்கள் சஷ்டி கொண்டாடப் படுகிறது.