மகப்பேறு தரும் குழந்தை சிவன்
குடும்பம் விளங்க குழந்தை இல்லையே என ஏங்குவோர் மனநிலையை விவரிக்கவே முடியாது. அவர்களின் குறையைத் தீர்க்கும் தலமாக தஞ்சாவூர் மாவட்டம் கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தம்பதியராக வந்து பரிகார பூஜை செய்தால் பலன் கிடைக்கும். பூஞ்சோலையாக இருந்த கொத்தங்குடி பகுதியில் கிருஷ்ணரும், அர்ஜூனனும் தர்ம சாஸ்திரம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மலை மலையாக பூக்கள் குவியத் தொடங்கின. இந்த பூக்களைக் கொண்டு இங்குள்ள சிவனுக்கு நம்மை விட வேறு யாரால் பூஜை செய்து விட முடியும் எனக் கேட்டான் அர்ஜூனன். அப்போது அங்கு ஒரு மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்திருந்த பீமனைக் கண்டார் கிருஷ்ணர். மனதிற்குள்ளேயே அவன் சிவபூஜை செய்வதையும், அவனது மனோசக்தியால் அங்கு பூக்கள் குவிவதையும் உணர்ந்தார். அர்ஜூனனுக்கு விஷயத்தை சொன்னதோடு, '' உடல் வலிமையை விட மனவலிமையே பக்திக்கு அவசியம். உள்ளன்புடன் செய்யும் பூஜையை கடவுள் விருப்பமுடன் ஏற்பார்'' எனத் தெரிவித்தார். பீமன் மானசீகமாக சிவபூஜை செய்ததால் 'பீமேஸ்வரம்' என இத்தலம் பெயர் பெற்றது. இப்போது கொத்தங்குடி என அழைக்கப்படுகிறது. இங்கு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்கின்றனர். பக்தர்களின் குறைகளை அம்மன் எடுத்துரைக்க, அதனை சுவாமி செவி சாய்த்துக் கேட்பதால் இங்குள்ள சிவலிங்கம் சாய்வாக உள்ளது. குழந்தை வரம் தரும் சிவன் இங்கு குழந்தை வடிவில் இருக்கிறார். குழந்தை இல்லாத தம்பதியினர், அர்ச்சகர் மூலம் குழந்தை சிவனைப் பெற்று தம்பதியின் மடியில் வைத்து பிரார்த்தனை செய்வர். பின் தொட்டிலில் இட்டு தாலாட்டுவர். இது முதல் பரிகாரம். குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் இங்குள்ள தொட்டிலில் குழந்தையை கிடத்தி நன்றிக்கடன் செலுத்த வேண்டும். இது இரண்டாம் பரிகாரம். தினமும் காலை 9:00 - 10:30 மணி, மாலை 6:30 - 7:30 மணிக்குள் பரிகார பூஜைகள் இங்கு நடக்கிறது. சனிக்கிழைமை காலையில் ராகுகாலம் என்பதால் பரிகார பூஜை கிடையாது.1300 ஆண்டுகள் பழமையான இத்தலம் சிதிலமாகி பூஜையின்றி கிடந்தது. தற்போது தான் இங்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. எப்படி செல்வது: தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் 14 கி.மீ,விசேஷ நாள்: நவராத்திரி, மகாசிவராத்திரி பிரதோஷம் நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 7:30 மணிதொடர்புக்கு: 94442 79696, 98400 53289 அருகிலுள்ள தலம்: நாச்சியார் கோவில் கல்கருடன் கோயில் (2 கி.மீ.,)நேரம்: காலை 7:30 - 12:30 மணி; மாலை 4:30 - 9:00 மணிதொடர்புக்கு: 94435 97388