தைப்பூச ஸ்பெஷல்
UPDATED : பிப் 07, 2020 | ADDED : பிப் 07, 2020
பிப்.8 பழநி தைப்பூசம் ஸ்பெஷல்முருகனை தரிசித்தால்...சிவன் வேறு முருகன் வேறு அல்ல. சிவனின் மறுவடிவே முருகன். அன்னை பார்வதியும் முருகனை விட்டு அகலுவதில்லை. சூரபத்மனுடன் போர் புரிய சென்ற போது தாயிடம் ஆசி பெற்றார் முருகன். தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி வேலாக்கி கொடுத்தாள் பார்வதி. இந்த சக்திவேல் இல்லாமல் முருகன் காட்சி தருவதில்லை. வேலுடன் போரிட்ட முருகனே சூரனை வதம் செய்து வாகை சூடினார். 'வேல்' என்றால் வெற்றி. முருகனை வழிபடுவோரை தீ வினை தீண்டாது. முருகனை தரிசித்தால் பிறவித்துன்பம் நீங்கும். நோய், முன்வினை, பாவம், பகை தீரும். மரண பயம் ஒழியும். ஆவினன்குடி அழகன்பழநி மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி அழகனாக 'குழந்தை வேலாயுதர்' என்ற பெயரில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலின் வரலாறு தெரியுமா.... மயிலில் உலகத்தை வலம் வந்த முருகன் கைலாய மலையில் இருந்து தென்திசை நோக்கி புறப்பட்டார். நெல்லிவனமான பழநி மலைக்கு வந்தார். அப்போது இங்கு தவம் செய்த மகாலட்சுமி, பூமாதேவி, காமதேனு, சூரியன், அக்னி பகவான் ஆகியோர் முருகனை தரிசித்ததால் குறை நீங்கப் பெற்றனர். இதனடிப்படையில் இத்தலம் 'திரு ஆவினன்குடி' எனப் பெயர் பெற்றது. 'திரு' என்பது மகாலட்சுமியையும், 'ஆ' என்பது காமதேனுவையும், 'இனன்' என்பது சூரியனையும், 'கு' என்பது பூமாதேவியையும், 'டி' என்பது அக்னியையும் குறிக்கும். திருஆவினன்குடி கோயிலில் இவர்களுக்கு சன்னதிகள் உண்டு. நாளெல்லாம் நல்லநாள் தைப்பூச விரதமிருப்போர் நீராடிய பின் விரதத்தை தொடங்குவர். விளக்கேற்றி முருகனுக்கு பால், பழம், கந்தரப்பம் படைப்பர். கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், 108 போற்றிகளை படித்த பின், பகல் உணவும், இரவு பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். இரவில் முருகன் கோயிலில் விளக்கேற்றுங்கள். கண்ணால் மலரும் பூக்கள் பொதுவாக கோயில்களில் முருகப்பெருமானின் வலதுபுறம் வள்ளியையும், இடதுபுறம் தெய்வானையையும் பார்த்திருப்பீர்கள். வள்ளி கையில் தாமரை மலரும், தெய்வானை கையில் நீலோற்பலம் மலரும் (சில இடங்களில் கிடைக்கும்) இருக்கும். முருகனுக்கு வலக்கண்ணாக சூரியனும், இடக்கண்ணாக சந்திரனும் உள்ளனர். சூரியக் கண்ணால் தாமரை மலரையும், சந்திரக்கண்ணால் நீலோற்பலம் மலரையும் பார்ப்பதால் அவை எப்போதும் மலர்ந்திருக்கும். இந்த மலர்களைப் போல முருக பக்தர்களின் வாழ்வும் மலர்ந்திருக்கும். எல்லாம் சிவமயம்மாம்பழத்திற்காக நடந்த போட்டியில் 'அம்மையப்பரே உலகம்' என சொல்லியபடி பெற்றோரைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றார் விநாயகர். அதைக் கண்டு தம்பியான முருகன் கோபத்துடன் பழநிக்கு சென்றார். ஏன் சென்றார்? இதில் ஆழமான தத்துவம் ஒன்று புதைந்துள்ளது. சிவனுக்குள்ளேயே உலகம் முழுவதையும் கண்டார் விநாயகர். அதாவது உலகமே அவருக்குள் அடக்கம் என்பது அவரது பார்வை. எல்லாம் சிவமயம் என்பதால் உலகையே வலம் வர வேண்டும் என்பது முருகனின் எண்ணம். சிவமே எல்லாம்; எல்லாமே சிவம் என்ற இரண்டு நிலைகளையும் உலகிற்கு உணர்த்தவே அண்ணனும், தம்பியுமாக இந்த திருவிளையாடலை நிகழ்த்திக் காட்டினர். பாலும் சுவையும் போல விநாயகரையும், முருகனையும் பிரிக்க முடியாது. எதிலும் சிவத்தைப் பார்ப்பவர்கள் ஞானம் என்னும் பழத்தைப் பெறுவர் என்பதை இது காட்டுகிறது. மந்திர கவசம் முருகனின் மந்திர நுால் கந்தசஷ்டி கவசம். இது 366 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மைசூர் மன்னர் தேவராய உடையார் 1654ல் சென்னிமலை முருகன் கோயிலில் திருப்பணி செய்வதற்காக நியமித்த தேவராய சுவாமிகள் இதைப் பாடினார். 'துதிப்போர்க்கு வல்வினை போம்' என்று துவங்கும் இக்கவசம் பயம் போக்கும் மந்திர நுால். இதை நெஞ்சில் பதிய வைப்போருக்கு பாவம், துன்பம் நீங்கி செல்வம் பெருகும். காலம் முருகன் கையில்தைப்பூசம் - ஜனவரி/பிப்ரவரிபங்குனி உத்திரம் - மார்ச்/ஏப்ரல் வைகாசி விசாகம் - மே/ஜூன் கந்தசஷ்டி - அக்டோபர்/நவம்பர் திருக்கார்த்திகை - நவம்பர்/டிசம்பர்துளிகள்!* முதன் முதலாக காவடி எடுக்கும் வழக்கம் தோன்றியது பழநியில் தான்.* இரவு பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.* பழநிக்கு 'சித்தன் வாழ்வு'. முருகனுக்கு 'சித்தநாதன்' என்றும் பெயருண்டு.* நவபாஷாணம் என்னும் ஒன்பது மூலிகையாலான பழநி முருகனை வடிவமைத்தவர் போகர். * பழநி முருகனை பங்குதாரராக தொழிலில் சேர்க்கும் பக்தர்கள், லாபத்தில் ஒரு பங்கை உண்டியலில் செலுத்துகின்றனர்.* மூலவர் தண்டாயுதபாணியின் கையில் உள்ள தண்டம் மிக சக்தி வாய்ந்ததாகும். * குழந்தை முருகனிடம் உள்ள மயிலுக்கு இந்திர மயில் என்று பெயர்.