உள்ளூர் செய்திகள்

சுபயோகம் வந்தாச்சு!

திருச்சேறை சாரநாதப் பெருமாள் பக்தர்களின் கனவை நனவாக்குவார். இவரை தரிசித்தாலே சுபயோகம் உண்டாகும்.திரேதாயுகத்தின் முடிவில் மகாவிஷ்ணுவின் வழிகாட்டுதலால் பிரம்மா பூலோகத்தில் மண் எடுத்து குடம் ஒன்றை செய்தார். அதில் வேதம், சாஸ்திரங்களை ஆவாஹனம் செய்து, கலியுகத்திற்கான படைத்தல் தொழிலை மேற்கொண்டார். பிரம்மா செய்த குடம் இருக்கும் இடத்திற்கு கும்பகோணம் என்றும், குடத்திற்கான மண் எடுத்த இடத்திற்கு சாரஷேத்திரம் என்றும் பெயர். சாரஷேத்திரம் தற்போது 'திருச்சேறை' எனப்படுகிறது. இங்கு சாரநாதப் பெருமாள் கோயில் உள்ளது.காவிரிக்கும், கங்கைக்கும் இடையே போட்டி எழுந்தது. காவிரி, திருச்சேறையில் தவம் கொண்டாள். அவளுக்கு வரம் அளித்த விஷ்ணுவே, 'சாரநாதப்பெருமாள்' என்னும் பெயரில் இங்குள்ளார்.வரம் கொடுக்கும் முன்னர், குழந்தை வடிவில் காட்சியளித்தார் விஷ்ணு. வந்திருப்பவர் கடவுளே என்பதை உணர்ந்த காவிரி வணங்கினாள். இதன் பின்னரே கருட வாகனத்தில் சுய வடிவில் எழுந்தருளினார். குழந்தை வடிவில் வந்ததால் சுவாமிக்கு 'மாமதலைப்பிரான்' என்றும் பெயருண்டு. 'மதலை' என்றால் 'குழந்தை'.மூலவர் நின்ற கோலத்தில் சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்தியபடி உள்ளார். சுவாமிக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, சாரநாயகி என்னும் நான்கு தாயார்களும், மார்பில் மகாலட்சுமியும் உள்ளனர். இவர்களை 'பஞ்ச லட்சுமி' என அழைக்கின்றனர். இங்குள்ள நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. விருப்பம் நிறைவேற தொடர்ந்து ஐந்து புதன்கிழமை வெள்ளை மலர்களால் இவரை அர்ச்சனை செய்கின்றனர்.எப்படி செல்வது: தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் 40 கி.மீ.,விசேஷ நாட்கள்: அட்சய திரிதியையன்று கருட சேவை, ஆடியில் 108 கலச திருமஞ்சனம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தை மாதம் பிரம்மோற்ஸவம்நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 4:30 - 7:30 மணிதொடர்புக்கு: 0435 - 246 8001, 94431 04374அருகிலுள்ள தலம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயில்(40 கி.மீ.,)