திருக்கடித்தானம் அற்புத நாராயணர்
பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் பிரதிஷ்டை செய்த பெருமாள் கேரளாவில் உள்ள திருக்கடித்தானத்தில் இருக்கிறார். இவரை வழிபட அற்புதம் நிகழும். கோயில் கட்ட விரும்பிய சகாதேவனுக்கு பெருமாள் சிலை கிடைக்கவில்லை. மனம் வருந்திய அவர் தீக்குளிக்க தயாரான போது, தானாக பெருமாள் சிலை ஒன்று தோன்றியது. இந்த அற்புதம் நிகழ்ந்ததால் சுவாமிக்கு 'அற்புத நாராயணன்' எனப் பெயர் ஏற்பட்டது. அறுபது ஆண்டுக்கு ஒரு முறை சுவாமியின் சக்தி அதிகரிக்கிறது. கற்பகவல்லி நாச்சியார் என்னும் பெயரில் மகாலட்சுமித்தாயார் இங்குள்ளார். வட்ட வடிவமான கருவறையில் சுவாமி கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் உள்ளனர். இரண்டு சன்னதிகள் இருப்பதால் இரட்டைக் கொடிமரங்கள் உள்ளன. கருவறைக்கு தெற்கிலுள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர் சன்னதிக்கு கதவுகள் கிடையாது. மரத்தாலான சட்டத்தின் வழியே இவர்களை தரிசிக்கலாம். கோயில் முகப்பில் உள்ள கல்துாண் ஒன்றில் கோயில் காவலாளி ஒருவரின் பூதவுடல் சிலையாக உள்ளது. இதன் பின்னணியில் உள்ள சம்பவம் சிந்திக்கத்தக்கது. ஒருமுறை அண்டை நாட்டு மன்னர் ஒருவர் இங்கு வந்த போது கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. மன்னரிடம் லஞ்சம் வாங்கிய காவலாளி இரவு நேரத்தில் தரிசனம் செய்ய அனுமதித்தான். நேர்மை தவறியதால் அந்தக் கணமே அவன் பிணமானான். இந்த உண்மையை எடுத்துக்காட்டவே அவனது உடல் கோயில் முன் வைக்கப்பட்டுள்ளது.கார்த்திகை மாதத்தில் பத்து நாள் திருவிழா நடக்கும். ஒன்பதாம் நாளில் மகாதீபம் ஏற்றப்பட்டு மறுநாள் வரை எரியும். இந்த வைபவத்தை 'சங்கேதம்' என அழைக்கின்றனர்.எப்படி செல்வது: கோட்டயம் - திருவல்லா செல்லும் வழியில் சங்கனாச்சேரி 19 கி.மீ., அங்கிருந்து 3 கி.மீ.,விசஷே நாட்கள்: திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, நரசிம்ம ஜெயந்திநேரம் : அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 094965 93371அருகிலுள்ள தலம்: திருவல்லா திருவாழ்மார்பன் கோயில் (7 கி.மீ.,)லோசனன்