வேந்தன்பட்டி தம்பி நந்தி
புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டி சொக்கலிங்கேஸ்வரர் (நெய் நந்தீஸ்வரர்) கோயிலில் பிரதோஷ பூஜை விசேஷம். இங்குள்ள நந்தியை 'தம்பி நந்தி' என்பர். நெய்நந்தீஸ்வரர் என்றும் பெயருண்டு.தல வரலாறு:கொடும்பாளூரில் மூன்று சிவலிங்கத்துடன் மூவர் கோயில் இருந்தது. அந்நியர்கள் அந்தக் கோயிலை சேதப்படுத்தினர். சிவலிங்கங்களும், நந்தியும் தப்பின. பக்தர்கள் வேந்தன்பட்டி, தெக்கூர், புதுப்பட்டியில் அவற்றை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினர். வேந்தன்பட்டி சிவனுக்கு 'சொக்கலிங்கேஸ்வரர்' என பெயர் சூட்டப்பட்டது. மீனாட்சியம்மனுக்கும் சந்நிதி கட்டப்பட்டது.நெய் நந்தீஸ்வரர்:வேந்தன்பட்டியில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்த பக்தர், நந்தீஸ்வரரை தீர்த்தக் குளத்திற்குள் வைத்து விட்டார். அவருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. மாடுகள் விரட்டுவது போல கனவும் கண்டார். நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாததால் தான், தனக்கு அவ்வாறு ஏற்பட்டதாக உணர்ந்த அவர், நந்தியை பிரதிஷ்டை செய்து, நெய் அபிஷேகம் செய்வதாகவும், கோயிலில் பெரியளவில் திருப்பணி செய்வதாகவும் வேண்டிக் கொண்டார். சில நாட்களிலேயே நோய் குணமானது. தன் வேண்டுதலை நிறைவேற்றும் விதத்தில் கோயில் கட்டி நெய் அபிஷேகம் நடத்தினார். இதன் பின் இந்த நந்திக்கு, 'நெய் நந்தீஸ்வரர்' என்ற திருநாமம் உண்டானது. ஊர் மக்கள் 'நந்தி கோயில்' என்று அழைத்தனர். தஞ்சாவூர் பெரியநந்தியும், வேந்தன்பட்டி நந்தியும் கொடும்பாளூரில் செய்யப்பட்டவை. இதனால் தஞ்சாவூர் நந்தியை 'அண்ணன் நந்தி' என்றும், வேந்தன்பட்டி நந்தியை 'தம்பி நந்தி' என்றும் குறிப்பிடுவர். அதிசய நெய்:ஒரு சமயம் நந்திக்கு அபிஷேகம் செய்த நெய்யில், கருவறையில் தீபம் ஏற்றினர். அப்போது, நெய் சிவப்பு நிறத்தில் மாறியது. அதன்பிறகு அபிஷேக நெய்யை வேறு எதற்கும் பயன்படுத்தாமல், உள்ளிருந்த கிணற்றில் கொட்டி விடுகின்றனர். இந்த நெய்யைத் தேடி பூச்சிகள் வருவதில்லை. ரிஷப ராசியினர் நந்திக்கு நெய் அபிஷேகம் நடத்துவதாக வேண்டினால் தடைபட்ட திருமணம், வேலைவாய்ப்பு நல்லவிதமாக நிறைவேறும். கால்நடைகளின் நோய் குணமாக, நந்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தைப் பெற்றுச் சென்று புகட்டுகின்றனர். மாடு வாங்குவோர் முதலில் சுரக்கும் பால் மற்றும் நெய்யால் நந்திக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஜல்லிக்கட்டில் காளைகள் வெற்றி பெறவும் வேண்டுகின்றனர்.மாட்டுப்பொங்கல்:நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கு நடுவே சக்கரம்< உள்ளது. இவருக்கு 'தனப்பிரியன்' என்ற பெயரும் உண்டு. இதனால், காசு, ரூபாய் நோட்டுக்களாலும் பக்தர்கள் அலங்கரிப்பர். மாட்டுப்பொங்கலன்று நந்தி அருகில் பிரதோஷ நாயகரை எழுந்தருளச் செய்வர். நந்திக்கு பழம், பூ, பலகாரம், கல்கண்டு அலங்காரம் செய்யப்படும். இவ்வூரிலுள்ள கச்சேரிக்கூடம் வேப்பமரத்தில் நந்தி சுயம்பு வடிவில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.அக்னிகாவடி:வைகாசி விசாகத்தை ஒட்டி 3 நாள் விழா நடக்கும். அப்போது அக்னி காவடியுடன் பக்தர்கள் பூக்குழி இறங்குவர். முடிகாணிக்கை செலுத்துவர். கோயில் எதிரே நந்திதீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் சூரியன், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. திருவிழா:சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், ஆருத்ரா தரிசனம்.இருப்பிடம்:மதுரையில் இருந்து திருப்புத்தூர் வழியாக, பொன்னமராவதி 75 கி.மீ., அங்கிருந்து 5கி.மீ. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, பொன்னமராவதி வழியாகவும் வரலாம்.திறக்கும் நேரம்:காலை 7 - மதியம் 12, மாலை 4.30- இரவு 8.30போன்:95858 50663.நாகப்பா செந்தில்