உள்ளூர் செய்திகள்

விவேகானந்தர் - பரணிபாலன் - பகுதி (9)

கோர்ட்டில் இருந்து என்ன தீர்ப்பு வருமோ என்ற நிலை... தீர்ப்பு வரும் வரை படிப்புக்கு பணம் வேண்டும். சாப்பாட்டுக்கு பணம் வேண்டும். அம்மாவைக் காப்பாற்ற வேண்டும். ஏதேனும் பகுதிநேர வேலைக்கு போனால் என்ன எனத் தோன்றியது. ஒரு வேலையில் சேர்ந்தார். அது பிடிக்கவில்லை. விட்டுவிட்டார். பல சமயங்களில் பட்டினியாய் கல்லூரிக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், நண்பர்களிடம், தான் சாப்பிடாமல் வந்தது பற்றி வாயே திறப்பதில்லை. ஏதோ விருந்து சாப்பிட்டது போல, அதிகமான உற்சாகத்துடன் பேசுவார் விவேகானந்தர்.ஒருமுறை தன் தந்தையின் நண்பர்கள் நடத்திய அலுவலகங்களுக்குச் சென்று வேலை கேட்டார் விவேகானந்தர். இவர் வாசலில் நுழைகிறார் என்றாலே, கதவுகள் சாத்தப்பட்டன.அவர் வருத்தப்பட்டார். சிவலிங்கம் முன்பு அமர்ந்து, ''சிவனே, என்ன உலகம் இது. மனிதர்களுக்கு தெய்வீகத் தன்மையை படைக்க வேண்டிய நீ, அவர்களுக்குள் இந்த ராட்சஷ குணத்தை ஏன் படைத்தாய்? உறவினர்கள் தான் விரட்டுகிறார்கள் என்றால், நண்பர்களுமா அப்படி இருக்க வேண்டும். எங்களால் வசதி பெற்ற இவர்கள், எங்களுக்கு ஒரு கஷ்டம் வந்துள்ள நிலையில், கழன்று கொள்வது ஏன்?'' என உருக்கமாகப் பிரார்த்தித்தார். இந்த வேளையில், விவேகானந்தர் உறவுகளாலும், நட்பாலும் அவமானப்படுத்தப்பட்ட விஷயம், புவனேஸ்வரிக்கு அம்மையாருக்கு தெரியவந்தது. அவர் பூஜையறைக்கு வந்தார்.''நரேன்! ஏன் இன்னும் அந்த சிவனை வணங்குகிறாய். காலமெல்லாம் அந்த காசி விஸ்வநாதனைக் கையெடுத்தேன். அதற்கு பரிசாக என் மாங்கல்யத்தை பறித்தான். அதன்பிறகு சொத்துக்களைப் பறித்தான். உறவினர்களை மனம் மாறச் செய்தான். இப்போது, உன் தந்தையின் நண்பர்களே உன்னை அவமானப்படுத்த செய்தான். இல்லை... இந்த உலகில் தெய்வமே இல்லை. ஒருவேளை இருந்தாலும், அது பாவம் செய்தவர்களுக்கே துணை போகிற தெய்வம். அதை வணங்காதே,'' என கத்தினார்.விவேகானந்தருக்கும் தாயின் வேதனை சரியென்றே பட்டது. ''ஆம்...ராமகிருஷ்ணர் சொல்வது போல, தெய்வம் என்ற ஒன்று இந்த உலகில் இருந்தால், அது நன்மையைத் தானே செய்ய வேண்டும். அது கேடு கெட்டவர்களுக்கு பணத்தைக் கொடுத்து, நல்லவர்களிடம் வறுமையையும் ஒப்படைத்து வைத்திருக்கிறதே! நான் பைபிள் படித்திருக்கிறேன். அதில் வரும் சாத்தானிடம் ஆண்டவன் தனது ஆட்சியை ஒப்படைத்து விட்டானோ!''... இப்படி சிந்தனை சிதற, விவேகானந்தர்ஒரு நாத்திகனாகவே மாறிவிட்டார்.இதை விவேகானந்தரின் பழைய நண்பர்கள் சிலர் பயன்படுத்திக் கொண்டனர்.''நரேன்! கடவுள் என்றும், பூதம் என்றும் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. இப்போதைய உன் குடும்பநிலை எங்களுக்கு தெரியும். எங்கள் தொழிலையே நீயும் செய். நாங்கள் செய்யும் தொழிலில் முறைகேடுகள் இருக்கலாம். ஆனால், பணம் வருகிறதே, வா'' என்றனர்.இன்னும் சிலர், ''நரேன்! உன் மனம் புண்பட்டு போயிருக்கிறது. நீ போதையில் மித. கஷ்டங்களை மறந்து விடுவாய்,'' என்றனர். விவேகானந்தரின் பேரழகில் மயங்கிய ஒரு பணக்கார பெண், ''நரேன்! பணம் தானே உனக்கு பிரச்னை! என் சொத்தையே உனக்கு தருகிறேன். ஆனால், நீ என் சொந்தமாக வேண்டும்,'' என்றாள். தகாத செயலுக்கு அழைத்தாள்.ஆனால், விவேகானந்தர் தன் பிரம்மச்சர்யத்தை மட்டும் விட மறுத்து விட்டார்.''அழியப்போகும் உடல் உன்னுடையது. அதை அனுபவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மரணம் உன்னை விரட்டுகிறது. அதற்கு முன் இந்த உலகத்துக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என சிந்தித்திருக்கிறாயா?'' என அவளிடம் கேட்டார். அவரது சிந்தனை மேலும் விரிந்தது.'கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்றால், இவளைப் போன்ற காமுகிகளையும் ஏன் படைத்தார்? பணத்திற்காக தங்களை விற்பவர்கள் ஒருபுறம், பணம்கொடுத்து தன்னையே விற்க வருபவர்கள் மறுபுறம்? நாத்திகர்கள் சொல்வது நிஜம்தானோ? கடவுள் இந்த பூமியில் இல்லையோ? சில சமயங்களில், நமது பாவ புண்ணியங்களுக்கேற்ப கடவுள் தண்டனை தருகிறார் என்கிறார்களே! ஆனந்தமயமான கடவுள் அப்படி செய்வாரா? தவறுகளுக்கு மனிதன் தண்டனை தரலாம். ஆண்டவன் தண்டனை தருகிறான் என்றால் அவனை ஆனந்தமயமானவன் என எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?'நாத்திகத்துக்கும், ஆத்திகத்துக்கும் இடையில் கிடந்து தவித்தார் அவர். அந்த சமயத்தில் தான் குருநாதர் ராமகிருஷ்ணர் அவரது நினைவில் வந்தார்.''ஆம்...குருநாதர் காளிபக்தர். அவரிடம் சொன்னால், காளியிடம் நம் பிரச்னையைச் சொல்லி பணம் வாங்கித் தந்துவிடுவார். வறுமை தீர்ந்து விடும். காளிக்கு தெரியாதா நம் நிலைமை?'' என்றபடியே குருஜியை தேடிச்சென்றார்.''குருஜி! நான் உங்களைத் தேடி வந்துள்ளது எதற்கென உங்களுக்கே தெரிந்திருக்கும். வறுமை என் குடும்பத்தை ஆட்டிப்படைக்கிறது. இப்போது என் தேவை பணம். அதை காளிமாதா தருவாளா? நீங்கள் தான் அவளுடன் பேசுவீர்களே! என் பிரச்னையை அவளிடம் சொல்லுங்கள். பணம் கிடைக்கும் வழியை அவளிடமே கேட்டுச் சொல்லுங்கள்,'' என்றார்.ராமகிருஷ்ணர் சிரித்தார். ''மகனே! நீ சொல்வதைப் போல், நம் குடும்ப பிரச்னைகளையெல்லாம் காளியிடம் சொல்லி அதற்கு பரிகாரம் கேட்கமுடியாது. உலக இன்பங்கள் பற்றி அவளிடம் பேசமாட்டேன். உனக்கு ஒரு கஷ்டம் வந்ததும், நாத்திகவாதத்தை ஒப்புக்கொண்டாய். அதனால், உன் கஷ்டம் மேலும் அதிகமாயிருக்கிறது. ஒன்று செய். நீயே இன்றிரவு காளி சந்நிதிக்கு செல். அவளிடம், உன் குறையைச் சொல். அவள் தீர்த்து வைப்பாள்,'' என்றார்.ராமகிருஷ்ணர் சொன்னதை அப்படியே நம்பினார் விவேகானந்தர். அன்றிரவு சரியாக 9 மணி. காளி சந்நிதியில் அவள் முன்னால் இருந்தார். அவளது அகண்ட உருவத்தை பார்த்தார். அவளது மங்கள முகத்தைப் பார்த்தார். கால்கள் தடுமாறின. உடலெங்கும் ஒரு தெய்வீக போதை! அவர் தன்னையறியாமல் பேசத் துவங்கினார். ''அம்மா! நான் துறவியாக வேண்டும், எதையும் சந்திக்கும் விவேகம் வேண்டும். பக்தியும், ஞானமும் வேண்டும்,'' என்றார்.ஏதோ ஒரு பரவச உணர்வில் ராமகிருஷ்ணரிடம் திரும்பினார்.''மகனே! அம்பாளிடம் பணம் கேட்டாயா?'' என்றார்.அப்போது தான், விவேகானந்தருக்கு 'நாம் எதற்காகப் போனோமோ, அதைக் கேட்க மறந்து விட்டோமே!' என்ற அதிர்ச்சி ஏற்பட்டது. ராமகிருஷ்ணர் சிரித்தபடியே சொன்னார். ''பரவாயில்லை நரேன்! மீண்டும் அவள் சன்னதிக்கு போ. உன் பணத்தேவையை அவளிடம் சொல். போ,'' என்று. மீண்டும் காளியின் முன்னால் நின்றார் விவேகானந்தர்.—தொடரும்