உள்ளூர் செய்திகள்

காயமே இது உண்மையடா!

மே 2., காஞ்சி காயாரோகணேஸ்வரர் கும்பாபிஷேகம்'காயமே இது பொய்யடா' என்று பாடுவதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால், ''எனது காயம் என்றும் நிலையானது, அதற்கு ஆதியுமில்லை, அந்தமும் இல்லை,'' என்று காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் காயாரோகணேஸ்வரராகிய சிவன், தன்னோடு பக்தர்களை ஐக்கியமாக்கிக் கொள்ள அழைக்கிறார். இது ஒருகுரு ஸ்தலம்.தல வரலாறு:புண்டரீக மகரிஷி, சிவபெருமானை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். அவருடைய தவத்தை ஏற்ற சிவன், வேண்டிய வரத்தை தருவதாக வாக்களித்தார். மகரிஷி சிவனிடம், ''ஐயனே! மனிதனின் உயிர் மட்டுமே முக்தி இன்பம் (பிறவா நிலை) பெறும். உடலோ மண்ணோடு மண்ணாகி விடும். நான் உயிரால் மட்டுமல்ல, உடம்போடும் முக்தி பெற விரும்புகிறேன். தாங்கள் எனக்கு அந்த பாக்கியத்தை அருள வேண்டும்,'' என்று கேட்டார். சிவனும் அவருடைய காயத்தை (உடம்பை) தன்னோடு தழுவி ஏற்றார். இதனால் 'காயாரோகணேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.காயம்+ஆரோகணம்+ஈஸ்வரர் என்று இந்தச்சொல்லைப் பிரிக்கலாம். 'காயம்' என்றால் 'உடம்பு'. 'ஆரோகணம்' என்றால் 'தழுவுதல்'. 'ஈஸ்வரர்' என்றால் 'சிவன்'. பக்தனை உடலோடு தழுவிய சிவன் என்பதே சமஸ்கிருதத்தில் காயாரோகணேஸ்வரர் ஆயிற்று. கோயிலுக்கு தெற்கில் காயாரோகணத்தீர்த்தம் உள்ளது. இதற்கு 'தாயார்குளம்' என்றும் பெயருண்டு. கைகூப்பிய குரு:இது ஒரு குரு ஸ்தலம். மே 28ல் குரு பெயர்ச்சி நடக்க உள்ள நிலையில், இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் அவசியம் வர வேண்டும். பிருகஸ்பதியாகிய குரு, இத்தலத்தில் சிவனை வழிபட்டு சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். தேவகுருவான இவர் காயாரோகணேஸ்வரருக்கு எதிரில் மேற்கு நோக்கி வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இவரது கைகள் மார்புக்கு நேராக குவிந்த நிலையில் உள்ளது. குருவின் அருள் இருந்தால் தான் ஒருவரின் வாழ்வில் திருமண யோகம், குழந்தைபாக்கியம் உண்டாகும். அவருக்குரிய வியாழக்கிழமையில், இங்கு வழிபட்டால் நன்மை உண்டாகும். எமதர்ம ஈஸ்வரர்:காயாரோகண தீர்த்தத்தின் மேற்குக் கரையில் எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் தனிக்கோயிலாக அமைந்துள்ளது. 'எமதர்ம ஈஸ்வரர்' என இவர் அழைக்கப்படுகிறார். நெய்தீபம் ஏற்றி இவரை வழிபட மரணபயம் நீங்கும். துர்க்கை சந்நிதியும் இங்குள்ளது. பெரியவர் வழிபட்ட சிவன்:காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 13வது பீடாதிபதியான சத்சித்கனேந்திர சரஸ்வதி சுவாமி கி.பி.272ல் இக்கோயிலில் சிவனோடு ஐக்கியமாகி ஸித்தி பெற்றார். இதன் காரணமாக, காஞ்சிப்பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, ஆண்டுதோறும் தவறாமல் இங்கு வழிபடுவதை தன் வழக்கமாக கொண்டிருந்தார். பைரவி என்னும் துறவி இனத்தவர் வழிபட்ட 'லிங்கபேசம்' என்ற லிங்கமும் இங்குள்ளது. இருப்பிடம்:காஞ்சிபுரத்திலிருந்து பிள்ளையார் பாளையம் செல்லும் வழியில் 2 கி.மீ.,திறக்கும்நேரம்:காலை6- 10, மாலை 4- இரவு 8போன்:99940 56438.