உள்ளூர் செய்திகள்

தீர்த்தம் அதிகமுள்ள திருத்தலம்

ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம். இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்ததால் இத்தலத்திற்கு 'சேதுக்கரை' என்று பெயர் இருந்தது. பின்னாளில் ராமேஸ்வரம் என்னும் கோயில் பெயர் ஊருக்கு சூட்டப்பட்டது. சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே. மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோயிலுக்குள் உள்ளன. 'ராமேஸ்வரம் சென்றும் குளிக் காதது போல' என்றொரு சொல்வழக்கு ஒன்றுண்டு. வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்காவிட்டாலும், இங்கு புனிதநீராடுவது அவசியம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. சீதாதேவி தன் கற்பை நிரூபிக்க அக்னியில் புகுந்தாள். அவளது கற்புக்கனல் அக்னி பகவானையே சுட்டது. ஒரு கற்புக்கரசியை சுட்ட பாவத்தை தீர்க்க, அக்னி பகவான் ராமேஸ்வரம் கடலில் நீராடினார். இதனால், இங்குள்ள கடல் 'அக்னிதீர்த்தம்' எனப்படுகிறது. இங்கு ஆடிமாதத்தில் அம்பிகை பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. தீர்த்த நீராடலுக்கு பெயர் பெற்ற ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தலமாக இருப்பதால் ஆடிஅமாவாசையும் இங்கு சிறப்பு.