உள்ளூர் செய்திகள்

ஆயிரம் வீடுகள் அர்ப்பணிப்பு

2008 செப்டம்பரில் ஒடிசாவில் மழை வெள்ளத்தில் பல கிராமங்கள் மூழ்கின. ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசலை இழந்து தவித்தனர். இதையடுத்து மக்களுக்கு சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட் மூலம் புதிய வீடுகளைக் கட்டித் தருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார் பாபா. கட்டாக், கேந்திரபுரா, பூரி ஆகிய மூன்று மாவட்டங்களில் 700 கான்கிரீட் வீடுகள், இரண்டு பள்ளிக்கூடங்கள் கட்டும் பணி, அக்.7, 2008ல் துவங்கியது. ஏழே மாதங்களில் பணி முடிக்கப்பட்டு 2009 ஏப்.3 ராமநவமியன்று வீடுகள் ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டன. 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் மறுவாழ்வு பெற்றனர்.இதுபோல், செப்.2011ல் மகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். அவர்களுக்கு உதவ முன்வந்த சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட், ஒடிசா மாநில அரசுடன் இணைந்து வீடு கட்டும் திட்டத்திற்கான பூமிபூஜையை 2013 ஜனவரி 7ல் நடத்தியது. ஏப்ரல் மாத இறுதிக்குள் வீடு கட்டும் பணி நிறைவு பெற்றது. 300 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. கியோஞ்கர், கேந்திரபுரா, ஜஜ்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு கிராமப்பகுதி மக்கள் இதன் மூலம் பயனடைந்தனர்.