போரூரை போற்று
ஜூலை 29, 2024 - ஆடி கார்த்திகை* தெய்வ அருள் பெற்ற அடியார்கள் பொது நலனுக்காகவே வாழ்ந்தனர். தாம் பெற்ற ஞானத்தை மற்றவரும் பெற வேண்டும் என தம் அனுபவங்களை நுால்களாக எழுதினர். இவர்களையே நாயன்மார்கள், ஆழ்வார்கள், முருகனடியார்கள், சித்தர்கள் எனப் போற்றுகிறோம். இவர்களில் மதுரை மீனாட்சியம்மன், முருகப்பெருமானின் அருள் பெற்ற அடியவர் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள். * செங்கல்பட்டில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ளது. திருப்போரூரில் முருகப்பெருமானுக்கு கோயிலை கட்டியவர் இவரே. இதன் சிறப்புகளை சொல்லும் நுாலான திருப்போரூர் சந்நிதி முறையை சுவாமிகளே எழுதினார். 1. தெய்வம் ஒன்றே நிலையானது. மற்றவை எல்லாம் நிலையற்றவை. 2. நான் குடும்பஸ்தனும் இல்லை, துறவியும் இல்லை. அதற்கும் கீழான பிறவி. 3. தெரிந்தோ, தெரியாமலோ நான் செய்த தவறுகளை மன்னிக்கும் இயல்பு உமக்கு மட்டுமே உண்டு. 4. நோய்க்கு ஆட்படாமலும், மனம் தவிப்புக்கு ஆளாகாமலும் உடலை விட்டு ஒரு நொடிக்குள் என் உயிர் உன் திருவடியை அடைய வேண்டும். என்னும் கருத்துடைய பாடல்களை இந்நுாலில் பாடியுள்ளார் சிதம்பர சுவாமிகள். கீழ்க்கண்ட பாடல்களைப் பாடி திருப்போரூர் முருகனைப் போற்றுவோம். இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்நல்லறுத்து ஞானியல்லேன் நாயினேன் - சொல்லறத்தின் ஒன்றேனும் இல்லேன் உயர்ந்த திருப்போரூரா!என்றே நான் ஈடேறுவேன்.ஏது பிழைசெய்தாலும் ஏழையேனுக்கு இரங்கித் தீது புரியாத தெய்வமே - நீதி தழைக்கின்ற போரூர் தனிமுதலே நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு.நோயுற்று அடராமல் நொந்துமனம் வாடாமல் பாயிற் கிடவாமல் பாவியேன் - காயத்தை ஓர் நொடிக்குள் நீக்கியெனை யொண்போரூர் ஐயாநின் சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து.