உள்ளூர் செய்திகள்

ஆராவமுதே...

ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். திவ்யதேசங்களின் பெருமைகளை நாம் அறிவதற்கு பிரபந்தம்தான் உதவியாக உள்ளது. இத்தொகுப்பு கிடைக்க காரணமானவர் சாரங்கபாணி பெருமாளே. வைணவ ஆச்சார்யரான நாதமுனிகள் ஒருமுறை கோயிலுக்கு வந்த போது, பக்தர் ஒருவர் பத்து பாடல்கள் பாடினார். பக்தியும், ஆழ்ந்த பொருளும் கொண்ட அப்பாடல்களைக் கேட்டதும் நாதமுனிகள் பரவசம் அடைந்தார். பாடலின் நடுவே 'குருகூர் சடகோபன் சொன்ன ஆயிரம் பாசுரங்களில் இந்தப் பத்தும்' என்னும் வரி வந்தது. அதைக் கேட்டதும் நாதமுனிகள் சிந்திக்கத் தொடங்கினார். 'பத்து பாடல்களும் இனிமையாக இருக்கிறதே. மற்ற பாடல்களைக் கேட்டால் எப்படி இருக்கும்?' என வியந்தார். மீதி பாடல்களை பாடும்படி வேண்டினார். பக்தருக்கோ அது பற்றி ஏதும் தெரியவில்லை. மீதிப் பாசுரங்களை எப்படிப் பெறுவது என தவித்தார் நாதமுனிகள். அன்றிரவு அவரின் கனவில் தோன்றிய பெருமாள், 'மீதிப் பாசுரங்களை ஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வானிடம் பெற்றுக் கொள்' என்றார். அதன்படி அங்கு சென்று நம்மாழ்வாரை வழிபட்டார். அவருக்கு நாலாயிரம் பாடல்கள் முழுமையாக கிடைத்தன. இவற்றை தொகுத்து நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களை வெளியிட்டார். இப்பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்ததால் சாரங்பாணி பெருமாளுக்கு 'ஆராவமுதாழ்வார்' எனப் பெயர் வந்தது. 'திகட்டாத இன்பம் கொண்டவர்' என்பது பொருள்.