உள்ளூர் செய்திகள்

பூக்களை விரும்பும் அண்ணாமலையார்

திருவண்ணாமலை தீபத்திருநாள் மிகவும் பழமையானது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவில் கூடியதையும், அனைவருக்கும் உணவு, தங்குமிடம் அளிப்பதற்காக தர்மசத்திரங்கள் இருந்ததையும் அண்ணாமலையார் கோயில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. துறவிகள் நிறைந்த ஊராக இத்தலம் இருந்ததால், 'ஆண்டிகள் மிகுந்தது அண்ணாமலை' என்ற பழமொழியும் உண்டானது. இங்கு வரும் சிவபக்தர்களை 'அண்ணாமலை திருக்கூட்டத்தார்' என்றனர். இவ்வூரில் உள்ள கோயில்களில் பூஜை செய்வதும், நந்தவனங்களில் மலர் பறிப்பதும் இவர்களது பணியாக இருந்தன. இன்றும், திருவண்ணாமலை கோயிலில் சில அடியவர்கள் மாலை கட்டும் பணி செய்கின்றனர். ''பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார்'' என்று அருணாசல சிவன் பூமாலை விரும்புவதை போற்றுகிறார் ஞானசம்பந்தர்.