உள்ளூர் செய்திகள்

மார்பிலும் காலிலும் ஒளிந்த தேவியர்

சத்திய ÷க்ஷத்திரம் என்னும் திருமயம், திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட திருத்தலம். திருமெய்யம் என்னும் பெயரே காலப்போக்கில் 'திருமயம்' ஆனது. சத்தியமூர்த்தி, அனந்த சயனமூர்த்தி என்று இரு மூலவர் சந்நிதிகள் உள் ளன. இதில் அனந்தசயன மூர்த்தி சந்நிதி குகைக்கோயிலாக மலையோடு சேர்ந்து அமைந்துள்ளது. கருடன், சித்திரகுப்தன், மார்க்கண்டேய மகரிஷி, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், கின்னரர்கள் பெருமாளைச் சூழ்ந்து காட்சி தருகின்றனர். ஒருசமயம் பாற்கடலில் பெருமாள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை கடத்த வந்தனர். அரக்கர்களுக்குப் பயந்து பூதேவி பெருமாளின் திருவடியிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளிந்து கொண்டனர். பெருமாளின் நித்திரையை கலைக்க மனமில்லாத ஆதிசேஷன், தன் வாயிலிருந்து விஷ ஜுவாலையை கக்கி அசுரர்களை விரட்டினார். விஷயம் அறிந்த பெருமாள் ஆதிசேஷனின் செயலைப் பாராட்டி மகிழ்ந்தார். தல வரலாற்றுக் கதையை அப்படியே சித்தரித்துக் காட்டுவது போல இக்கோயில் அமைந்துள்ளது.