தங்க கொடி மரம் உருவான வரலாறு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள தங்கக் கொடிமரம் உருவான வரலாறு தெரியுமா? கோயிலின் மூலஸ்தானத்திலும், சன்னதிகளிலும் தங்கத்தகடுகள் வேயப்பட்டுள்ளது. ஆனால் கொடிமரத்திலுள்ள செம்பு தகட்டில் தங்க முலாம் பூசப்பட்டு, வெளிறிப் போயிருந்தது. புதிய தங்க கொடிமரம் அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. பத்தனம்திட்டை மாவட்டம், கோந்நி காட்டில் தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டு, 2015 ஆக.29ல் தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை நடத்த லாரியில் பம்பை கொண்டு வந்தனர்.சுகுமாரன் ஆசாரி, பாபு ஆசாரி தலைமையில் மரத்தை 35 வகை மூலிகை கலக்கப்பட்ட நல்லெண்ணெய்யில் ஆறு மாதங்கள் ஊற வைத்தனர்.2016 கார்த்திகை மாதம் கொடிமரத்தை சுற்றி தகடுகள் பொருத்துவதற்கான தங்கத்தை, தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜித்துக் கொடுத்தார். மதுரை தெற்குவாசலை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆசாரி தலைமையில் 30 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். படுமலை அனந்தன் ஆசாரி, பழனி ஆசாரி ஆகியோர் செம்பு வேலைகள் செய்தனர். செங்கன்னுார் சதாசிவம் ஆசாரி, கல் பணிகளை செய்தார்.2017 பிப்., 17ல் பழைய கொடிமரம் அப்புறப்படுத்தப்பட்டது. புதிய கொடிமரம், மே 22ல் இரண்டாயிரம் ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள், ஊழியர்களால் ஐந்து கி.மீ. துாரம், கீழே வைக்காமல் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஜூன் 25 காலை 11:50 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பிரதிஷ்டை செய்ய, உச்சியில் வாஜி வாகனம் (குதிரை வாகனம்) வைத்து அபிஷேகம் செய்தனர்.