உள்ளூர் செய்திகள்

ரயிலுக்கு நேரமாகலே!

பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானை இஷ்ட தெய்வமாய் வழிபட்டார். ஒருமுறை அவர் காஞ்சிபுரம் சென்றார். எல்லா கோவில்களையும் தரிசித்த அவர் இங்கிருந்த முருகன் கோவிலான குமரக்கோட்டத்திற்கு செல்லாமல் வேறு ஊருக்கு கிளம்பினார். அப்போது ஒரு சிறுவன் அவரருகே வந்து, 'குமரக்கோட்டத்தைத் தரிசிக்கவில்லையா?' என்று கேட்டான். அவனிடம், 'அந்தக்கோவில் எங்கிருக்கிறது என எனக்குத் தெரியாதே; ரயிலுக்கும் நேரமாகிறதே!' என்று பதிலளித்தார் சுவாமி. 'கோவிலுக்கு சென்று தரிசித்து வரும் வரை ரயில் வராது' என்று சிறுவன் கூறினான். சிறுவனின் பேச்சை நம்பி அவன் பின்னாலேயே சென்று குமரக்கோட்டத்து முருகனைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார். தரிசனம் முடிந்து பார்த்த போது உடன் வந்த சிறுவனைக் காணவில்லை. வந்தவன் தன் உள்ளம் கவர்ந்த கந்தனே என்று மகிழ்ந்தார். பின் ரயில் நிலையம் வந்தார். ரயிலும் தாமதமாகவே வந்தது. முருகனின் திருவிளையாடலை எண்ணி வியந்தவராய் பயணத்தை தொடர்ந்தார்.